தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

கரூர் அருகே தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
தாந்தோன்றிமலை வெங்கடரமணசாமி கோவிலில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
Published on

கரூர்,

கரூர் சுங்ககேட் அருகே தாந்தோன்றிமலை பகுதியில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கல்யாண வெங்கடரமணசாமி கோவில் உள்ளது. தென்திருப்பதி என போற்றப்படும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பெருந்திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிம்ம வாகனம், வெள்ளி ஹனுமந்த வாகனம், வெள்ளி கருட வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலித்தார். கடந்த 6-ந்தேதி அன்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

தேரோட்டம்

இந்த நிலையில் புரட்டாசி பெருந் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 3 மணிக்கு யாகசாலை பூஜை முடிந்ததும், மூலவர் வெங்கடரமண சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதற்கிடையே கோவிலின் அருகே பூக்கள், வாழைமரம், மாவிலையால் அலங்கரிக்கப்பட்டு தேர் தயார் நிலையில் இருந்தது. காலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் ரத்தினஅங்கி அலங்காரத்தில் கோவிலிலிருந்து சீனிவாச பெருமாள் புறப்படாகி தேரில் எழுந்தருளினார். அப்போது தீபாராதனை காட்டப்பட்டு பூஜை நடந்தது. பின்னர் காலை 8.30 மணியளவில் தேரோட்ட நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது தேங்காய்களை தேரின் முன்புறத்தில் உடைத்து பக்தர்கள் சிதறவிட்டனர். இதைதொடர்ந்து கோவிந்தா... கோவிந்தா... கோஷம் விண்ணதிர தேரானது திரளான பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

தேங்காய் உடைத்து வழிபாடு

தேரின் முன்புற பகுதியில் கயிறு மூலம் தற்காலிக தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். எனினும் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் வந்ததால் சிறிது நேரம் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் தாந்தோன்றிமலை கோவிலை சுற்றிய வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் சீனிவாசபெருமாள் தேரானது ஆடி, அசைந்து சென்றது. அதற்கு முன்புறத்தில் சிறிது இடைவெளியில் ஆஞ்சநேயர் தேர் சென்று கொண்டிருந்தது. தேர்வரும் வீதியில் பக்தர்கள் பலர் சூடமேற்றியும், தேங்காய் உடைத்தும் சீனிவாச பெருமாளை வரவேற்றனர். காலை 10 மணியளவில் தேரானது நிலையத்திற்கு வந்தது. அப்போது சீனிவாசபெருமாளுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. அப்போது பக்தர்கள் மனமுருகி பெருமாளை தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கரூர், தாந்தோன்றிமலை, திருமாநிலையூர், ராயனூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வருகை தந்தனர்.

தாந்தோன்றிமலை பகுதியில் முன்பு விவசாயம் பெருமளவு நடந்தது. அப்போது அறுவடை செய்ததும், சிறிதளவு நெல், கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட தானியங்களை வெங்கட ரமணசாமிக்கு படைத்து வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். அந்த வகையில் நேற்று நடந்த தேர்திருவிழா நிகழ்ச்சியின் போது தேரின் முன்புறத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் அவல் பொரி மற்றும் தானியங்களை பக்தர்கள் தூவி சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நாக்கில் அலகு குத்தி அங்கபிரதட்சணம் செய்தும் பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தியதை காண முடிந்தது.

வண்டிக்கால்

தேர்திருவிழாவையொட்டி தாந்தோன்றிமலை வீதிகளில் பக்தர்கள், பொதுநல அமைப்புகள், வணிக நிறுவனத்தினர் உள்ளிட்டோர் சார்பில் அன்னதான நிகழ்ச்சியும் மற்றும் நீர்மோர், பானகம், சர்பத் உள்ளிட்ட நீராகாரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதனால் தாந்தோன்றிமலை மெயின்ரோட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருந்தது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் மாலை 5.30 மணியளவில் தேரி லிருந்து சீனிவாசபெருமாள் புறப்பாடாகி வண்டிக்கால் பார்த்தல் எனும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தேர் சென்ற வீதிகளில் சீனிவாச பெருமாள் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com