சேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

சேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சேடக்குடிக்காடு சேத்து மாரியம்மன் கோவில் திருவிழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Published on

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சேடக்குடிக்காடு கிராமத்தில் பிரசித்திபெற்ற சேத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பால்குட திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பால்குட திருவிழா கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். அன்று முதல் நாள்தோறும் விளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. இதில் பால்குட திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தனர். மேலும் சிலர் அலகு குத்திக்கொண்டும், காவடி எடுத்துக்கொண்டும் வந்தனர். சேடக்குடிக்காடு அய்யனார் கோவில் ஏரியில் தொடங்கிய பால்குட ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, சேத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை கொண்டு சேத்து மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சந்தனக்காப்பு அலங்காரம்

இதேபோல் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடி கிராமத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா தலமான சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சுந்தராம்பிகை அம்மனுக்கு பால், பழம், பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டு உடுத்தி சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இலந்தைகூடம், அரண்மனைகுறிச்சி, செம்பியக்குடி, குலமாணிக்கம், பாளயபாடி, திருமானூர், கீழகவட்டாங்குறிச்சி உள்பட சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com