

மதுராந்தகம் செண்டு பொறியியல் கல்லூரி மாணவர்கள் அதை மாற்ற வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.
மெக்கானிக்கல் பிரிவு நிறைவாண்டு மாணவர்களான அவர்கள், ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழும் குழந்தையை மீட்கும் சாதனத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
அவர்களிடம் பேசுவோம்...
உங்களைப் பற்றி ஓர் அறிமுகம்...
முகமது ஆரிப், விசாகர், சந்தோஷ், விஜய் ஆகிய நாங்கள், மெக்கானிக்கல் பிரிவு நிறைவாண்டு மாணவர்கள். நிறைவாண்டு புராஜெக்டாக நாங்கள் உருவாக்கியதுதான், ஆழ்துளைக் கிணற்றில் இருந்து குழந்தையை மீட்கும் சாதனம்.
இப்படிப்பட்ட ஒரு சாதனத்தை உருவாக்கத் தோன்றியது ஏன்?
நாம் மேலும் மேலும் நிலத்தடி நீரைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில், எங்கும் கணக்கில்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல சமயங்களில், ஆழ்துளைக் கிணறு அமைப்போர், நில உரிமையாளர்களின் அலட்சியத்தால், ஆழ் துளைக் கிணற்றுக்குள் குழந்தைகள் தவறி விழுவதும் தொடர்கதையாக உள்ளது. மீட்பு முயற்சியின்போது குழந்தைகள் உயிரிழப்பது பெரும் துயரம். இந்த நிலையை மாற்றும் வகையில் ஒரு சாதனத்தை உருவாக்க முயற்சிக்கலாமா என்று நாங்கள் ஆலோசித்தோம். இந்த யோசனையை எங்கள் கல்லூரி முதல்வர் அப்துல் காதரிடமும் தெரிவித்தோம். அவர் அளித்த ஊக்கம், உதவியால் நாங்கள் இந்தக் கருவியை வெற்றிகரமாக செய்து முடித்தோம்.
இக்கருவி செயல்படும் விதம் பற்றிக் கூறுங்கள்..
இக்கருவியின் சட்டக அமைப்பை ஆழ்துளைக் கிணற்றின் மேற்புறத்தில் பொருத்த வேண்டும். அதில் உள்ள மோட்டாரை இயக்கினால், அது ஓர் உருளையைச் சுழற்றி, அதில் சுற்றப்பட்டிருக்கும் கயிற்றையும், அதில் இணைக்கப்பட்டிருக்கும் இரு மீட்புக் கரங்களையும் ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கும். மீட்புக்கரங்களுக்கு மேலாக ஒரு கேமராவும் எல்.இ.டி. விளக்கும் பொருத்தப்பட்டிருக்கும். அவற்றின் மூலம், குழந்தை இருக்கும் இடத்தை அறிந்துகொள்ள முடியும். மீட்புக் கரங்களில் ஒன்று நிலையானதாகவும், மற்றொன்று நகரக்கூடியதாகவும் இருக்கும். அவற்றின் உதவியால் நெஞ்சு, முதுகுப்பகுதியில் குழந்தையைப் பற்றி, மோட்டாரால் உருளையை எதிர்ப்புறத்தில் சுழலச் செய்து மேலே தூக்க முடியும். இக் கரங்களில் ஸ்பாஞ்ச் பொருத்தப்பட்டிருப்பதால், குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.