கடலோர மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பலஅடுக்கு மீன்வளர்ப்பு முறை

கடலோர மாவட்டங்களில், பருவநிலை மாற்றத்தை சமாளிக்க புதிய ஒருங்கிணைந்த பல அடுக்கு மீன்வளர்ப்பு முறை செயல்படுத்தப்படுவதாக, முதன்மை ஆராய்ச்சியாளர் சக்காரியா கூறினார்.
கடலோர மாவட்டங்களில் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க பலஅடுக்கு மீன்வளர்ப்பு முறை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் சார்பில், கடலோர கிராமங்களில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதனை கையாளும் விதம் குறித்து மீனவர்களுடன் கலந்தாய்வு நிகழ்ச்சி நேற்று காலை மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் நிலைய பொறுப்பு விஞ்ஞானி மனோஜ்குமார் வரவேற்று பேசினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் பாலசரசுவதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதன்மை விஞ்ஞானி ஜெகதீஷ் பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை ஆராய்ச்சியாளர்கள் சக்காரியா, கலாதரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் முதன்மை ஆராய்ச்சியாளர் சக்காரியா பேசியதாவது:-

பருவநிலை மாற்றத்தால் கடல் நீரின் உப்புத்தன்மை, அமிலத்தன்மையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் காரணமாக மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுகிறது. மீன்கள் முட்டையிடுவது, மீன்குஞ்சு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால் தேசிய அளவிலான பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற வேளாண் ஆராய்ச்சி அமைப்பு உருவாகப்பட்டு உள்ளது. இதன் மூலம் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப நன்றாக வளரக்கூடிய மீன்கள் கண்டறியப்பட்டு கூண்டுகளில் வளர்க்க ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

ஒருங்கிணைந்த பலஅடுக்கு மீன்வளர்ப்பு முறையும் செயல்படுத்தப்படுகிறது. இதில் சிங்கிஇறால், முத்துச்சிப்பி, கடல்பாசி ஆகியவற்றை சேர்த்து வளர்க்கலாம். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆராய்ச்சி நடக்கிறது. மீன்களின் இனப்பெருக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு தேசிய விவரப்பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மீனவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு ஆராய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் முதன்மை ஆராய்ச்சியாளர் கலாதரன் பேசும் போது, கடலில் பருவநிலை மாற்றத்தால், மீன் இனப்பெருக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதனை எப்படி சமாளிப்பது என்பது முக்கியமானது ஆகும். இதற்காக ஒருங்கிணைந்த பல்அடுக்கு மீன்வளர்ப்பு முறை செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மீனவர்கள் அதிக லாபம் பெறலாம். கடல் பாசி மீனவர்களின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்க கூடியது. ஒரு டன் பாசி ரூ.47 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனை வளர்த்தால் நஷ்டம் ஏற்படாது. கடலுக்கும் தீங்கு எதுவும் கிடையாது. ஆகையால் மீனவர்கள் இந்த முறையை செயல்படுத்த வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் விஞ்ஞானிகள் காளிதாஸ், ரஞ்சித், லிங்கபிரபு, சுஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். விஞ்ஞானி கவிதா நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com