7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

தானேயில் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மனைவி கொடுத்த புகார் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
Published on

தானே,

தானே மான்பாடாவில் போலீஸ்காராக பணியாற்றி வருபவர் சூரியகாந்த். இவர் மீது அவரது மனைவி பிரச்சித்தா மான்பாடா போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தன் கணவர் சூரியகாந்த் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதாக கூறியிருந்தார். இந்த புகார் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸ்காரர் சூரியகாந்த் 7 பெண்களை திருமணம் செய்ததது தெரியவந்துள்ளது. சூரியகாந்த் 1986ம் ஆண்டு ஸ்வாதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை பிரிந்துவிட்டார். அதன்பிறகு காந்திலால் என்ற பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் 1991ம் ஆண்டு பிரச்சித்தாவின் வீட்டில் நடந்த கொள்ளை குறித்து விசாரிக்க சூரியகாந்த் சென்றுள்ளார். அப்போது அவருக்கு பிரச்சிதாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. 2 பேருக்கும் பிடித்து போகவே 1992ல் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்தநிலையில் ஓராண்டு ஆன பிறகே பிரச்சித்தாவிற்கு, சூரியகாந்த் ஏற்கனவே காந்திலாலை திருமணம் செய்து இருப்பது தெரியவந்தது. காந்திலால் மறைவிற்கு பிறகு சூரியகாந்த் 1995ம் ஆண்டு சுஷ்மா என்ற பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பிரச்சிதா கணவரை கண்டித்து உள்ளார். ஆனால் அவர் பிரச்சிதாவின் பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து அவர் சுஷ்மாவின் மறைவிற்கு பிறகு 1998ம் ஆண்டு ஸ்வப்னாலி என்ற பெண்ணையும், 2007ல் ஹேமலதா என்ற பெண்ணையும், 2014ல் வனிதா என்ற பெண்ணையும் ஏமாற்றி திருமணம் செய்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த பிரச்சித்தா, கணவர் சூரியகாந்த் மீது மான்பாடா போலீசில் புகார் அளித்துள்ளார். இதில் சூரியகாந்தால் பாதிக்கப்பட்ட 4 பெண்கள் பிரச்சிதாவிற்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கல்யாண் மண்டல துணை கமிஷனர் சஞ்சய் ஷிண்டே கூறுகையில் இந்த மோசடி குறித்து முழுமையான விசாரணை நடத்த உள்ளோம். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் சூரியகாந்த்தை பணி இடைநீக்கம் செய்துள்ளோம் என்றார். தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என போலீஸ்காரர் சூரியகாந்த் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com