ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்ற, ஆம்புலன்ஸ் செல்ல போக்குவரத்தை தடுத்து நிறுத்திய போலீஸ் சூப்பிரண்டு

ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்ற, ஆம்புலன்ஸ் செல்ல போக்குவரத்தை போலீஸ் சூப்பிரண்டு தடுத்து நிறுத்தினார்.
ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்ற, ஆம்புலன்ஸ் செல்ல போக்குவரத்தை தடுத்து நிறுத்திய போலீஸ் சூப்பிரண்டு
Published on

சிவமொக்கா,

ஆபத்தான நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்றுவதற்காக அவரை ஆம்புலன்சில் வெகுவிரைவாக கொண்டு செல்லும் வகையில் சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரே, போக்குவரத்தை தடுத்து நிறுத்தினார். மனிதநேயத்துடன் நடந்து கொண்ட அவருக்கு தற்போது பாராட்டுகள் குவிகின்றன.

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா கார்ல்நபளி பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜ். இவரது மனைவி சுஜாதா(வயது 32). இவருக்கு திடீரென உடல்நலைக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சுஜாதாவை சிகிச்சைக்காக சிவமொக்கா டவுனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பத்மராஜ் அனுமதித்தார். அங்கு சுஜாதாவுக்கு டாக்டர்கள் பரிசோதனை மேற்கொண்டனர்.

அப்போது அவருக்கு சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த அவருடைய உடல்நிலையும் மோசமடைந்து கொண்டே இருந்தது. இதையடுத்து டாக்டர்கள் உடனடியாக அவரை உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் அதிவிரைவாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள அந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனால் பதற்றம் அடைந்த பத்மராஜ் வாகன நெரிசலை தாண்டி ஆம்புலன்ஸ் மூலம் வெகுவிரைவாக சுஜாதாவை உடுப்பியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்தார். இதையடுத்து அவர், தனது மனைவியின் நிலை குறித்தும், உடனடியாக அவரை காப்பாற்ற உடுப்பியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரேவிடம் கூறினார். மேலும் தனக்கு உதவி செய்யும்படியும் பத்மராஜ், போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டுக் கொண்டார். பத்மராஜின் நிலையை உணர்ந்த அபினவ்கெரே ஆபத்தான நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினார். இதனால் மனிதாபிமானத்துடன் அவர், பத்மராஜுக்கு உதவ முன்வந்தார்.

அதன்படி சுஜாதாவை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் வெகுவிரைவாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையை சென்றடையும் வகையில் போக்குவரத்தை நிறுத்தினார். அதாவது, ஆம்புலன்ஸ் செல்ல இருந்த அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் அந்த சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி நிசப்தமானது. இதையடுத்து சிவமொக்காவில் இருந்து சுஜாதாவை ஏற்றிக்கொண்டு ஒரு ஆம்புலன்ஸ் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அந்த மருத்துவமனைக்கு புறப்பட்டது.

மதியம் 2 மணிக்கு சிவமொக்காவில் இருந்து புறப்பட்ட அந்த ஆம்புலன்ஸ், வாகனங்கள் ஏதும் இல்லாத சாலைகளில் பயணித்து வெகுவிரைவாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள அந்த தனியார் மருத்துவமனையை சென்றடைந்தது.

சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் சிவமொக்கா மாவட்டத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. சுஜாதாவுக்கு உடுப்பியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனிதநேயத்துடன் நடந்து கொண்ட சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபினவ்கெரேவுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com