சிங்கம்புணரியில் சேறும், சகதியுமான வாரச்சந்தை

சிங்கம்புணரியில் சேறும், சகதியுமான வாரச்சந்தையால் பொருட்கள் வாங்க செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
மழை பெய்ததால் சேறும், சகதியுமான வாரச்சந்தையை படத்தில் காணலாம்.
மழை பெய்ததால் சேறும், சகதியுமான வாரச்சந்தையை படத்தில் காணலாம்.
Published on

சேறும், சகதியுமான...

சிங்கம்புணரி பேரூராட்சி பகுதியில் 18 வார்டுகள் உள்ளன. சிங்கம்புணரி சுற்றிலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. சிவகங்கை, மதுரை, புதுக்கேட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் எல்லை மற்றும் தொடக்கப்பகுதியில் சிங்கம்புணரி உள்ளதால் நான்கு மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்கள் சிங்கம்புணரிக்கு வந்து செல்கிறார்கள். சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் வாரச்சந்தைக்கு வந்து காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கி செல்வது வழக்கம். இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை சந்தை கூடுகிறது.

பேரூராட்சி நிர்வாகத்தால் நடத்தப்பட்டு வரும் வாரச்சந்தையில் முறையான கழிவுநீர் கால்வாய் இல்லை. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி சந்தை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சந்தைக்கு காய்கறிகள், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

வியாபாரம் பாதிப்பு

இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

மழைக்காலங்களில் சந்தை சேறும், சகதியுமாக காணப்படுவதால் பெரும்பாலான பொதுமக்கள் வருவதில்லை. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. வேறு இடத்தில் புதிதாக சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக ரூ.1 கோடியில் டெண்டர் விட்டும் இதுவரை பணி நடைபெறவில்லை.

இதற்கிடையே தேவக்கோட்டை ஆர்.டி.ஓ. சுரேந்திரன், பேரூராட்சிகளின் இயக்குனர் மாடசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு சந்தையை மாற்று இடத்தில் தற்காலிகமாக அமைக்க இடம் தேர்வு செய்து உள்ளனர். அந்த இடத்திற்காவது சந்தையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com