மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 150 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்

கொரோனா சிகிச்சைக்காக மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் 150 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 150 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார்
Published on

மதுரை,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தீவிரமாக போராடி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுபோல், தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோய் சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை பெரிய ஆஸ்பத்திரியிலும் கொரோனா தனி வார்டு உள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் முதல் உயிரிழப்பாக மதுரையை சேர்ந்த 54 வயது நபர் இறந்துபோன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் மதுரையில் அதிகரித்து வரும் நிலை உருவாகி உள்ளது. இந்தநிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்களுக்காக கட்டப்பட்ட புதிய விடுதியானது காரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

இங்கு 150 படுக்கைகள் உள்ளன. ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக ஆக்சிஜன் சிலிண்டர்கள், மின்விசிறிகள் என அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com