அரூர் அருகே வரட்டாறு அணையின் பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு

அரூர் அருகே வரட்டாறு அணையின் பிரதான கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் மணல் மூட்டைகள் அடுக்கி சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரூர் அருகே வரட்டாறு அணையின் பிரதான கால்வாயில் திடீர் உடைப்பு
Published on

அரூர்,

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில் வரட்டாறு அணை உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த மாதம் 10-ந்தேதி வரட்டாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம், வள்ளி மதுரை, கீரைப்பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, குடுமியாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி, மாவேரிப்பட்டி, கம்மாளம்பட்டி, ஈட்டியம்பட்டி, மாம்பாடி உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த நிலம் பாசன வசதி பெறும் என்றும், 25 ஏரிகள் நிரம்பும் என்றும் பொதுப்பணித்துறை சார்பில், தெரிவிக்கப்பட்டது.

வரட்டாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களை உழவு செய்ய தொடங்கினர். இந்தநிலையில், நேற்று முன்தினம் அணை அருகேயுள்ள, பிரதான கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது. இதுகுறித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அணையில் இருந்து பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேலும், உடைந்த கால்வாயை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் கூறுகையில், கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கால்வாய் உடைப்பை மணல் மூட்டைகள் வைத்து சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணி முடிவடைந்தவுடன் பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று கூறினார்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கால்வாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசனத்திற்கு இன்னும் கூடுதலாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com