தஞ்சையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு 518 பேர் பங்கேற்பு

தஞ்சையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு நடைபெற்றது. இதில் 518 பேர் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் போலீஸ் பணிக்கு உடல் தகுதி தேர்வு 518 பேர் பங்கேற்பு
Published on

தஞ்சாவூர்,

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் போலீஸ்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறையில் பணி புரிய 2-ம் நிலை போலீசாருக்கான எழுத்துத்தேர்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த தேர்வில் தஞ்சை சரகத்திற்குட்பட்ட தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 1,168 ஆண்களும், 586 பெண்களும் தேர்ச்சி பெற்றனர்.

இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல்நாள் தேர்வில் பங்கேற்க ஆண்கள் 600 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இவர்களில் 518 பேர் தான் பங்கேற்றனர். இவர்களுக்கு எடையளவு, உயரம், மார்பளவு அளவிடப்பட்டு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

ஐ.ஜி. மேற்பார்வை

இந்த தேர்வு திருச்சி மண்டல ஐ.ஜி. வரதராஜூ, தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. பின்னர் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

2-ம் நிலை போலீசாருக்கான எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடைபெறுகிறது. இன்றும்(நேற்று), நாளையும்(இன்று) ஆண்களுக்கு உயரம், மார்பளவு சரிபார்த்தல், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். 8-ந் தேதி பெண்களுக்கு 400 மீட்டர் ஓட்டமும், உடல் குதி தேர்வும் நடைபெற உள்ளது. பின்னர் குண்டு எறிதல், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகள் நடைபெறும். இந்த போட்டிகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடத்தப்படும்.

குற்றங்கள் குறைவு

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற திருட்டுகளில் ஈடுபட்டவர்களில் 90 சதவீதம் பேரை கண்டறிந்து கைது செய்து, பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம். குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது குற்றங்கள் மிகவும் குறைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com