

திருச்சி,
ராணுவத்தில் காலியாக உள்ள சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான முகாம் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தஞ்சையில் நடந்தது. இந்த முகாமில் திருச்சி, கரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை உள்பட 15 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். முகாமில் உடற்திறன் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை நடத்தப்பட்டன.
இதில் தேர்வானவர்களுக்கு அடுத்த கட்டமான எழுத்துத்தேர்வு திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
இந்த எழுத்துத்தேர்வில் 961 பேர் பங்கேற்றனர். தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் டி-ஷர்ட், அரைக்கால் சட்டை அணிந்தே இளைஞர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
எழுத்துத்தேர்வுக்கான முடிவுகள் 15 நாட்களுக்குள் ராணுவ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் பல்வேறு ராணுவ பயிற்சி மையங்களில் பயிற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.