மதுரை வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால் ஈரோடு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது

மதுரை வாலிபரின் உடல் உறுப்பு தானம் காரணமாக ஈரோடு ஆஸ்பத்திரியில் பெண் ஒருவருக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.
மதுரை வாலிபரின் உடல் உறுப்பு தானத்தால் ஈரோடு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது
Published on

ஈரோடு,

கரூர் மாவட்டம் சங்கிபூசாரியூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். விவசாயி. இவருடைய மனைவி ஜெகதாமணி (வயது 45). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல பிரச்சினை ஏற்பட்டது. கரூரில் உள்ள அபிராமி கிட்னி கேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு பரிசோதனையின்போது ஜெகதாமணியின் 2 சிறுநீரகங்களும் செயல் இழந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து அவருக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அத்துடன் ஜெகதாமணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதற்காக அவரது உறவினர்கள் வழியில் சிறுநீரகம் தானம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது முடியவில்லை. எனவே கடந்த 2018-ம் ஆண்டு தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் சிறுநீரகம் வேண்டி விண்ணப்பித்தார். ஆனால் உடனடியாக அவருக்கு மாற்று சிறுநீரகம் கிடைக்கவில்லை. எனவே தொடர்ச்சியாக டயாலிசிஸ் சிகிச்சை செய்யப்பட்டது.

மூளைச்சாவு

இந்தநிலையில் மதுரையில் நடந்த ஒரு விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த கருப்பையா (30) என்ற வாலிபர் படுகாயம் அடைந்தார். அவரை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது கருப்பையா மூளைச்சாவு அடைந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மரண நேரத்தில் கருப்பையா உயிர் பிழைக்க முடியாவிட்டாலும், அவரது உடல் உறுப்புகள் மூலம் பலரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்பதை கருப்பையாவின் குடும்பத்தினரிடம் டாக்டர்கள் எடுத்துக்கூறினார்கள். அதன் அடிப்படையில், இளைஞர் கருப்பையாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர்.

இந்த தகவல் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

அங்கு ஜெகதாமணி பதிவு செய்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த நிலையில், அவருக்கு சிறுநீரகம் வழங்க ஆணையம் முடிவு செய்து தகவல் தெரிவித்தது.

3 மணிநேரம்

இதுபற்றிய தகவலை ஜெகதாமணியின் உறவினர்கள் அபிராமி கிட்னி கேர் ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி டாக்டர் சரவணனிடம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஜெகதாமணிக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின. முதல் கட்டமாக ஜெகதாமணி, கரூரில் இருந்து ஈரோட்டில் உள்ள அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சைக்கான முன்ஏற்பாடுகள் நேற்று முன்தினம் தொடங்கின. அதுமட்டுமின்றி ஜெகதாமணியின் ரத்த மாதிரி பரிசோதனை, கொரோனா தொற்று பரிசோதனையும் செய்யப்பட்டது. வாலிபர் கருப்பையாவின் ஒரு சிறுநீரகம் ஜெகதாமணிக்கு பொருந்தும் வகையில் முடிவுகள் வந்தது. உடனடியாக நேற்று மதுரையில் இருந்து ஆம்புலன்சு மூலம் கருப்பையாவின் சிறுநீரகம் ஈரோட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, ஆம்புலன்சு வரும் வழிகளில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தனர். இதனால் 3 மணி நேரத்தில் மதுரையில் இருந்து ஈரோடு அபிராமி கிட்னி கேர் ஆஸ்பத்திரிக்கு சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது.

சிறுநீரகம் பொருத்தம்

அங்கு டாக்டர் சரவணன் தலைமையில் தயாராக இருந்த மருத்துவக்குழுவினர் சிறுநீரகத்தை பெற்றுக்கொண்டு, அறுவை சிகிச்சையை தொடங்கினார்கள். டாக்டர்களின் தீவிர முயற்சியால் சிறுநீரகம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது ஜெகதாமணி நல்ல உடல் நிலையுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி டாக்டர் சரவணன் கூறும்போது, உடல் உறுப்புகள் தானம் மூலம் பலர் புதுப்பிறப்பு பெறுகிறார்கள். உடல் உறுப்பு தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும், என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com