

ஈரோடு,
ஈரோடு அருகே கதிரம்பட்டியை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் தனியார் நிறுவனத்தில் பிட்டராக உள்ளார். இவருடைய மனைவி சுதா (வயது 24). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர்கள் 3 பேரும் நசியனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். சுதா மேட்டுக்கடையில் உள்ள ஒரு செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
சுதா கடந்த ஒரு வாரமாக செல்போன் கடைக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். காளிமுத்து வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மதியம் அவர் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது சுதாவை காணவில்லை. அருகில் உள்ள கடைக்கு சென்றிருப்பதாக நினைத்த காளிமுத்து மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றார். மாலையில் அவர் வேலையை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போதும் சுதாவை காணவில்லை. அதனால் அக்கம் பக்கத்திலும், உறவினர்கள் வீட்டிலும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் இரவு 10.15 மணிஅளவில் கதிரம்பட்டியில் உள்ள காலிஇடத்தில் ஒரு பெண் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். இதுபற்றி அறிந்ததும் காளிமுத்து அங்கு விரைந்து சென்றார். அப்போது சுதா ரத்தக்கரையுடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுதா மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாவின் கழுத்தை அறுத்தவர் யார்? சுதா எதற்காக காலி இடத்துக்கு சென்றார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கதிரம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.