வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாகவும், அவரை மீட்டுத் தருமாறும் அவருடைய மகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
வெளிநாட்டில் வேலைக்கு சென்ற பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கொடுமை
Published on

வேலூர்,

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் கலந்துகொண்டு முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, ரேஷன்அட்டை, வங்கிக்கடன், வீட்டுமனைபட்டா உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த கரீம்பாஷா என்பவருடைய மகள் பாத்திமா கொடுத்துள்ள மனுவில் எனது தாய் ஷபானாபேகத்தை (வயது 35), ஆர்.என்.பாளையம் பகுதியை சேர்ந்த ஏஜெண்டு ஒருவர் வீட்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தார். கடந்த டிசம்பர் மாதம் மஸ்கட்டுக்கு சென்ற எனது தாயை அங்கு சரியாக உணவு கொடுக்காமல் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக போனில் தெரிவித்தார். இதனால் அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிய ஏஜெண்டை அணுகியபோது ரூ.60 ஆயிரம் கொடுத்தால் இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார். எனவே எனது தாயை மீட்டு இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

வேலூரை அடுத்த பாலமதி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில் எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். கிராமத்தின் அருகில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்படும் வெடிகளால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. கல்குவாரியின் ஆழம் அதிகரித்துவிட்டதால் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துவிட்டது. கல்குவாரிக்கு வரும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சாலைகள் மிகவும் மோசமாகிவிட்டன. வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் துகள்களால் மாசு ஏற்படுகிறது. மேலும் எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் கட்டதேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகிலேயே ஜல்லிக்கற்கள் உடைக்கும் எந்திரம் அமைக்க மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி உள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில் சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை திட்டத்திற்கு நெமிலி, காவேரிப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள விவசாய நிலங்களில் அளவீடு செய்து கற்கள் நடப்பட்டுள்ளது. ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீடு குறித்து விவசாயிகளுக்கு இதுவரை எந்தவித தகவலும் தெரிவிக்கப்பட வில்லை. எனவே இதுகுறித்து விவசாயிகளுக்கு உரிய விளக்கத்தை தெரிவித்துவிட்டு அதன்பின்னர் நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளனர்.

பள்ளிகொண்டாவில் உள்ள அரசு மாணவர்கள் விடுதியில் 5 நாட்களுக்கு பதில் 3 நாட்கள் மட்டுமே முட்டை வழங்குவதாகவும், சரியாக உணவு வழங்குவதில்லை என்றும் கூறி மாணவர்கள் புகார் மனு கொடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com