இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த என்ஜினீயரிங் மாணவரை விரட்டி பிடித்த போலீசாருக்கு பரிசு

திரிசூலம் ரெயில் நிலையத்தில் இளம்பெண்ணிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய என்ஜினீயரிங் மாணவரை விரட்டிப்பிடித்த ரெயில்வே போலீசாருக்கு ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இளம்பெண்ணிடம் செல்போன் பறித்த என்ஜினீயரிங் மாணவரை விரட்டி பிடித்த போலீசாருக்கு பரிசு
Published on

தாம்பரம்,

சென்னை வளசரவாக்கம், சவுத்ரி நகரை சேர்ந்தவர் வஸ்தி (வயது 22). இவர் சென்னை மீனம்பாக்கம், விமானநிலையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீட்டிற்கு செல்வதற்காக திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரெயிலில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்தார்.

அப்போது திடீரென ஒரு வாலிபர் ஜன்னல் வழியாக வஸ்தி கையில் இருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த வஸ்தி திருடன், திருடன் என கூச்சலிட்டார்.

இதைக் கேட்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தாம்பரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி, போலீஸ்காரர்கள் சந்தோஷ்குமார், சரவணன் மற்றும் ரெயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்காரர் ராமகிருஷ்ணன் ஆகியோர் விரட்டிச்சென்று அந்த வாலிபரை பிடித்தனர்.

பின்னர் அந்த வாலிபரை தாம்பரம் ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் திரிசூலம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் (21) என்பதும், அவர் சென்னையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மாரிச்செல்வத்தை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று தாம்பரம் ரெயில் நிலையம் வந்த ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, மின்சார ரெயிலில் ஏறி பயணிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தார். மேலும், தாம்பரம் ரெயில் நிலையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். அப்போது திரிசூலம் ரெயில் நிலையத்தில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினீயரிங் மாணவரை பிடித்த போலீசாரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

பின்னர் சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறுகையில், பெண்ணிடம் செல்போன் பறித்தவரை விரட்டிப்பிடித்த போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் பயணிகள் உடனடியாக 1512 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com