சென்னை கோயம்பேடு அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து, லாரி டிரைவரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வாலிபர்

போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து லாரி டிரைவரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோயம்பேடு அருகே போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் போல் நடித்து, லாரி டிரைவரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வாலிபர்
Published on

செல்போன்-பணம் பறிப்பு

நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் மாதவன். லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு லாரியில் டைல்ஸ் லோடு ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது லாரியை மறித்த வாலிபர் ஒருவர், தான் கோயம்பேடு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறி லாரிக்கான ஆவணங்களை கேட்டார். டிரைவர் மாதவன், ஆவணங்களை காட்டினார்.

அதனை வாங்கி பார்த்த வாலிபர், ஆவணங்கள் எதுவும் சரி இல்லை என கூறி அபராத தொகை கேட்டு மிரட்டினார். அத்துடன் மாதவனிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்தார்.

கைது

இதனால் சந்தேகம் அடைந்த மாதவன் திருடன், திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீஸ் அடையாள அட்டையை கேட்டபோது தப்பிக்க முயற்சி செய்தார்.

பின்னர் பொதுமக்கள், அந்த வாலிபருக்கு தர்மஅடி கொடுத்து கோயம்பேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.

அவர், வடபழனியை சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பதும், அந்த பகுதியில் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டிவந்த அவர், போலீஸ் போல் நடித்து இதுபோல் பலரிடம் பணம் வசூல் செய்து வந்ததும் தெரிந்தது. அவரிடம் இருந்து ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com