ஆதார்கார்டுகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்: தபால் ஊழியர் பணியிடை நீக்கம்

திருப்பூரில் ஆதார்கார்டுகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவத்தில் தபால் ஊழியர் பணியிடை நீக்கம் செய்து கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆதார்கார்டுகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம்: தபால் ஊழியர் பணியிடை நீக்கம்
Published on

திருப்பூர்,

திருப்பூர் அலகுமலை வாய்க்கால்மேடு பகுதியில் ஆதார்கார்டுகள் மற்றும் தபால்கள் குப்பையில் கிடந்த செய்தி பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அந்த ஆதார்கார்டுகள் மற்றும் தபால்களை திருப்பூர் தெற்கு தாசில்தார் கோபாலகிருஷ்ணன் கைப்பற்றி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் அம்சவேணியிடம் ஒப்படைத்தார். அவற்றை பெங்களூருவை சேர்ந்த துணை இயக்குனர் (ஆதார்வினியோகம்) அசோக்லெனின் மற்றும் திருப்பூர் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கோபிநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வில் 138 ஆதார் கார்டுகள், தொலைபேசி ரசீதுகள், ஆயுள்காப்பீட்டுத்துறை கடிதங்கள் உள்பட 600 தபால்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவை அனைத்தும் காந்தி நகர் தபால்நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் குப்பையில் கொட்டுப்பட்ட தபால்கள், ஆதார் கார்டுகள் அனைத்தும் 27-12-2016 முதல் 31-1-2017 வரை திருப்பூர் காந்தி நகர் தபால் அலுவலகத்தால் பெறப்பட்டவை என்பது தெரியவந்தது. இவை அனைத்தும் காந்திநகர் தபால் நிலையத்தை சேர்ந்த கிராமிய தபால் ஊழியர் கோபாலகிருஷ்ணன் என்பவருக்கு பதிலாக வேலை செய்த தபால்துறையை சாராத வெளிநபர் ராகுல் என்பவரிடம் பட்டுவாடா செய்வதற்காக ஒப்படைக்கப்பட்டிருந்தவை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ராகுலிடம் திருப்பூர் வடக்கு கோட்ட ஆய்வாளர் சுப்பையா விசாரணை நடத்தினார். அப்போது, மேற்கண்ட தபால்களை பட்டுவாடா செய்ய முடியாததால் அவற்றை தபால் அலுவலகத்தில் ஒப்படைக்காமல் அலகுமலையில் உள்ள தனது வாடகை குடோனில் கடந்த ஒரு வருடமாக மறைத்து வைத்திருந்ததாகவும், அவை எவ்வாறு குப்பையில் கொட்டப்பட்டது என்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தனக்கு பதிலாக சரியான நபரை நியமனம் செய்யாத தபால்துறை கிராமிய தபால் ஊழியர் கோபாலகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினமே சரியான முகவரி உள்ளவர்களுக்கு ஆதார் கார்டுகளும், பிற கடிதங்களும் பட்டுவாடா செய்யப்பட்டன. அவற்றில் முகவரி மாறி சென்று விட்டவர்களின் 12 ஆதார்கார்டுகள் மட்டுமே பட்டுவாடா செய்ய முடியவில்லை. மற்ற அனைத்து கார்டுகள் மற்றும் தபால்கள் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டன. ஆகவே அந்த 12 ஆதார் கார்டுகளும் பெங்களூருவில் உள்ள ஆதார் அலுவலகத்துக்கே அனுப்பி வைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com