சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதி வைக்க வேண்டும் மகன்களால் கைவிடப்பட்ட பெற்றோர் கோரிக்கை

சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதி வைக்க வேண்டும் என மகன்களால் கைவிடப்பட்ட பெற்றோர் கோரிக்கை வைத்தனர்.
சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதி வைக்க வேண்டும் மகன்களால் கைவிடப்பட்ட பெற்றோர் கோரிக்கை
Published on

தஞ்சாவூர்,

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு பாதுகாப்பு சட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமை தாங்கினார்.

இதில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மகன்களால் கைவிடப்பட்டு மகள்கள், பேத்திகள் வீடுகளில் வசித்து வரும் 30 பேர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதில் சொத்தை எழுதி வாங்கி ஏமாற்றியது, சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போடுவது, அடித்து கொடுமைப்படுத்துவது, மீண்டும் சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

30 பேர்

இந்த மனுக்கள் மீது வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் விசாரணை நடத்தினார். மனுதாரர்கள் மட்டுமே வந்திருந்தனர். எதிர்தரப்பினர் வராததால் முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இது குறித்து வருவாய் கோட்டாட்சியர் கூறியதாவது:-

தாய், தந்தையர்களை அவர்களது பிள்ளைகள் கடைசி காலம் வரை பார்த்து கொள்ள வேண்டும். வீட்டைவிட்டு வெளியே அனுப்பக்கூடாது. கூட்டத்தில் 30 பேர் பங்கேற்று மனுக்களை அளித்தனர்.

இதில் 3 பேர் தனது சொத்தை என் மகன்கள் எழுதி வாங்கி கொண்டு வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விட்டனர். மீண்டும் அதே சொத்தை எங்களது பெயரில் மாற்றி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். ஒருவர், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும், மற்றொருவர் வீட்டை விற்கவிடாமல் மகன் அடிப்பதாகவும் தெரிவித்து இருந்தனர். ஒரே ஒரு பெண் இருந்தும் அவள் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டதாக ஒருவர் மனு அளித்தார்.

மருத்துவ செலவு

மற்றவர்கள் அனைவரும் சாப்பாடு போடுவதில்லை. மருத்துவ செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என புகார் தெரிவித்துள்ளனர். மகன்களால் கைவிடப்பட்ட இவர்கள் மகள்கள் மற்றும் பேத்திகளின் வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த மனுக்கள் மீது உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. எல்லா புகாரும் உண்மையா? என எதிர்தரப்பினரை அழைத்து விசாரித்தால் தான் தெரியவரும். சிலர் மகள்களின் தூண்டுதலின்பேரில் மகன்கள் மீது புகார் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

திருவையாறில் இப்படி ஒரு புகார் மனு வந்து, தற்போது கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் இருதரப்பினரையும் அழைத்து புகார் உண்மையானது என தெரியவந்தால் மகன்கள் தங்களது சம்பளத்தில் ஒரு பங்கு தொகையை பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவசெலவு, பாதுகாப்பு மிக முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com