

ராமநாதபுரம்,
புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தீபாவளி பண்டிகையையொட்டி மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையில் தலா 10 போலீசாரை கொண்ட 10 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் ராமநாதபுரம் மாவட்ட எல்லையான எஸ்.பி.பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது அந்த வழியாக சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வழியாக ராமநாத புரம் வந்த தனியார் ஆம்னி பஸ்சை நிறுத்தி சப்-இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் சோதனையிட்டார்.
அப்போது அந்த வாகனத்தில் பஸ் டிரைவரின் பின் பகுதியில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 25 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பஸ் டிரைவர் மயிலாடுதுறை பெரியதெருவை சேர்ந்த கோதண்டம் மகன் சீனிவாசன்(வயது 40), கண்டக்டர் நாகூர் பி.பனங்குடியை சேர்ந்த பக்கிரிசாமி மகன் ஈவேரா(31) ஆகியோரை கைது செய்த போலீசார் ஆம்னி பஸ்சையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் 15 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது புதுச்சேரிக்கு வெள்ளை அடிக்கும் பணிக்கு சென்றதாகவும், திரும்பி வரும்போது மதுபாட்டில் வாங்கி வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வாகனத்தில் இருந்த நெல்லை மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் பேச்சிமுத்து(20), சுப்பையா மகன் முருகன்(30), தென்காசி லட்சுமணன் மகன் விவேகானந்தன்(22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்.
கடந்த 2-ந்தேதி முதல் மாவட்டம் முழுவதும் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் தொடர்ந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும் மது விலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தெரிவித்தார்.
இந்த சோதனையில், கடந்த 2-ந் தேதி 353 டாஸ்மாக் மதுபானங்கள் பறிமுதல் செய்து 19 பேர் கைது செய்யப்பட்டு 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 3-ந்தேதி 65 மிலிட்டரி மதுபானங்கள், 55 புதுச்சேரி மதுபானங்கள், 242 டாஸ்மாக் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.