போலந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வட அமெரிக்கா, மெக்சிகோ நாட்டு சிலந்திகள் கடத்தல் - திருப்பி அனுப்ப உத்தரவு

போலந்து நாட்டில் இருந்து சென்னைக்கு பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட வடஅமெரிக்கா மற்றும் மெக்சிகோ நாட்டு சிலந்திகளை திருப்பி அனுப்பும்படி சுங்க இலாகா அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
போலந்து நாட்டில் இருந்து சென்னைக்கு வட அமெரிக்கா, மெக்சிகோ நாட்டு சிலந்திகள் கடத்தல் - திருப்பி அனுப்ப உத்தரவு
Published on

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களில் முதுகெலும்பு இல்லாத உயிரினங்கள் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள், தபால் பிரிவுக்கு வந்த பார்சல்களை ஆய்வு செய்தனர்.

அப்போது போலந்து நாட்டில் இருந்து அருப்புக்கோட்டையில் உள்ள முகவரிக்கு வந்த பார்சல் மீது சந்தேகம் கொண்டு அவற்றை பிரித்து பார்த்தனர். அதில் 107 மருத்துவ குப்பிகளில் ஏதோ ஊர்ந்து செல்வதுபோல் இருப்பதை கண்டனர்.

உடனே ஒரு குப்பியை எடுத்து அதன் மூடியை திறந்து பார்த்தபோது அதில் சிலந்தி இருந்தது. எந்த வகையிலும் பாதிக்காமல் காற்று வசதியுடன் இருக்க 107 குப்பிகளை தயார் செய்து, அதில் சிலந்திகள் அடைக்கப்பட்டு உயிருடன் கடத்தி வரப்பட்டு இருந்தது.

இது குறித்து மத்திய வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த வன உயிரின அதிகாரிகள், அந்த சிலந்திகளை ஆய்வு செய்தனர்.

இந்த வகை சிலந்திகள் வட மற்றும் மத்திய அமெரிக்காவிலும், மெக்சிகோ நாட்டிலும் வாழக்கூடியது. வன உயிரின சட்டப்படி உரிய அனுமதி இல்லாமல் இவைகளை கொண்டு வரக்கூடாது. இதனால் ஏதாவது பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் திருப்பி அனுப்பி விடுங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த சிலந்திகளை மீண்டும் போலந்து நாட்டுக்கே திருப்பி அனுப்ப தபால் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த அருப்புக்கோட்டையில் உள்ள முகவரிக்கு சென்று, அந்த சிலந்திகள் யாருக்காக கடத்தி வரப்பட்டது? எதற்காக சிலந்தியை கடத்தி வந்தார்கள்? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com