இந்தியாவில் காசநோய் பாதிப்பால் தினமும் 1,000 பேர் மரணம் அடைகிறார்கள் அதிகாரி திடுக்கிடும் தகவல்

இந்தியாவில் காசநோய் பாதிப்பால் தினமும் 1,000 பேர் மரணம் அடைகிறார்கள் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் காசநோய் பாதிப்பால் தினமும் 1,000 பேர் மரணம் அடைகிறார்கள் அதிகாரி திடுக்கிடும் தகவல்
Published on

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் காசநோயை கண்டறிய நவீன எக்ஸ்ரே கருவிகள் பொருத்தப்பட்ட வாகனம் நேற்று தொடங்கப்பட்டது. இந்த வாகனத்தை நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள நெஞ்சகநோய் மையத்தில் இருந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பிரகலாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியாவில் காசநோயால் ஒரு நாளைக்கு 1,000 நபர்கள் மரணமடைகிறார்கள். 3 லட்சம் குழந்தைகள் பள்ளி படிப்பை தொடர முடியாமல் பாதியிலே நின்று விடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அனைவருக்கும் காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நோய் அறிகுறியுள்ளவர்கள் இந்த முகாமின் மூலம் சளி பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனையை உங்கள் வீட்டு அருகிலேயே செய்து கொள்ளலாம். மற்ற நாட்களில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ளலாம்.

சிகிச்சை இலவசம்

காசநோய் பரிசோதனை மற்றும் 6 மாத சிகிச்சை முற்றிலும் இலவசம். மேலும் சிகிச்சை காலங்களில் ஊட்டசத்து உதவித் தொகை ரூ.500 மாதந்தோறும் வழங்கப்படும். மத்திய அரசு 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டு உள்ளது. அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே காசநோயை முற்றிலும் ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து குமரி மாவட்ட காசநோய் ஒழிப்பு துணை இயக்குனர் துரை பேசியபோது, காசநோய் பரிசோதனை செய்யும் வாகனம் மூலமாக களப்பணியாளர்கள் வருகிற 23-ந் தேதி வரை வீடு வீடாக சென்று தொடர் இருமல் இருப்பவரிடம் சளி மாதிரிகள் சேகரித்து அதனை சிபிநாட் என்ற அதிநவீன பரிசோதனைக்கு உட்படுத்துவார்கள். காசநோய் பரிசோதனைக்காக பிரத்யேகமாக 2 சிபிநாட் அதிநவீனகருவி குமரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனை மாவட்டத்தில் எந்த தனியார் பரிசோதனை மையங்களிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் பேருக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டு சுமார் 1500 காசநோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர் இருமல் உள்ளவர்கள் இந்த நடமாடும் எக்ஸ்ரே வசதியை பயன்படுத்தி தங்களுக்கு காசநோய் உள்ளதா? என்பதை கண்டறிந்து சிகிச்சை பெற்று கொள்ளலாம். காசநோய் சிகிச்சையில் இருப்பவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை என்றாலும், பரிசோதனை மற்றும் சிகிச்சை ஆலோசனைகள் தேவை என்றாலும் 04652-298073, 9442888803 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com