திருப்பூரில் தொடங்கப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை மாநகராட்சி ஆணையாளரிடம அனைத்து கட்சியினர் கோரிக்கை மனு

திருப்பூரில் தொடங்கப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அனைத்து கட்சியினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
திருப்பூரில் தொடங்கப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை மாநகராட்சி ஆணையாளரிடம அனைத்து கட்சியினர் கோரிக்கை மனு
Published on

திருப்பூர்,

திருப்பூரில் உள்ள அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமாரை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகரில் உள்ள பள்ளிக்கூடங்கள், பொதுபயன்பாட்டு கட்டிடங்கள், குடிநீர் தொட்டிகள், குடியிருப்புகள் ஆகியவற்றை இடித்து விட்டு வணிக வளாகங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடம், பூங்கா போன்றவற்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே மாநகரில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்த திட்டங்களை நிறைவேற்றும் போது மேலும் கடுமையான நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுமட்டுமின்றி மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் வளர்ச்சி திட்டங்களை செய்வது, பல்வேறு முறைகேடுகளுக்கும் வழிவகுக்கும்.

எனவே, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் என்னென்ன?. இதில் என்னென்ன கட்டுமானங்கள் நடைபெறுகிறது என்பன குறித்த அனைத்து திட்டங்கள் குறித்த முழுமையான வெள்ளை அறிக்கையை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட வேண்டும். பின்னர் அதுகுறித்து விவாதித்து முடிவு செய்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை நடத்தி, அதில் எட்டப்பட்டும் முடிவுகளை அடிப்படையாக கொண்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அதுவரை முத்தூப்புதூர் பள்ளிக்கூடம் இடிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும், கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு சொத்து வரியை உயர்த்தி உள்ளது. அதாவது ரூ.452 ஆக இருந்த வரித்தொகை ரூ.70 ஆயிரத்து 874 ஆக உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. பின்னர் 8 மாதங்கள் கழித்து 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் வரியை உயர்த்தி மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அப்போதும், நாங்கள் போராடினோம்.

இதைத்தொடர்ந்து வரியை உயர்த்தமாட்டோம் என்று அதிகரிகள் உத்தரவாதம் கொடுத்தனர். தற்போது இந்த மாதம் மீண்டும் பல மடங்கு உயர்த்திய வரித்தொகையை கட்ட வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். எனவே உயர்த்திய வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் அனைத்து கட்சி சார்பாக தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com