கூட்டணி அரசு நீடிப்பது பற்றி அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேச்சு

கர்நாடகத்தில் கூட்டணி அரசு நீடிப்பது பற்றி அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
கூட்டணி அரசு நீடிப்பது பற்றி அதிகாரிகளுக்கு சந்தேகம் வரக்கூடாது: துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் பேச்சு
Published on

பெங்களூரு,

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் கூட்டணி அரசு உறுதியாக உள்ளது. இது வளர்ச்சியை முன்னெடுத்து செல்லும் அரசு. இந்த கூட்டணி அரசு நீடிப்பது சந்தேகம் என்று அதிகாரிகள் பேசிக்கொள்வதாக தகவல் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

அதிகாரிகள் பேசியதையும் நான் காதில் கேட்டுள்ளேன். அந்த அதிகாரிகளின் பெயர்களும் எனக்கு தெரியும். அதிகாரிகளுக்கு இந்த அரசு நீடிப்பது பற்றி எந்த சந்தேகமும் வரக்கூடாது. ஒருவேளை அத்தகைய சந்தேகம் வந்தால், அது நிர்வாகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள அதிகாரிகளை நாங்கள் நான்றாக பார்த்துக்கொள்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தப்படி நல்லாட்சி நிர்வாகத்தை நடத்துகிறோம். மாநிலத்தில் 90 சதவீதம் பேருக்கு வறுமைக் கோட்டுக்கு கீழ் (பி.பி.எல்.) உள்ள ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அப்படி என்றால் மாநிலத்தில் இவ்வளவு பேர் வறுமையில் உள்ளார்களா?. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும். பெங்களூரு, அறிவுசார் நகரம். பி.பி.எல். ரேஷன் கார்டு வழங்கும் விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.

தற்போது கர்நாடக பட்ஜெட்டின் அளவு ரூ.2.34 லட்சம் கோடி ஆகும். ஆனாலும் ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை. கர்நாடகத்தில் ரூ.46 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் எந்த மாநிலமும் இத்தகைய தைரியமான நடவடிக்கையை எடுக்கவில்லை.

ரூ.40 ஆயிரம் கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை நாம் பார்த்துள்ளோம். தற்போது விவசாயிகள் தற்கொலை சிறிது குறைந்துள்ளது. இவ்வாறு பரமேஸ்வர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com