பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் உத்தவ் தாக்கரே தன்னை சந்தித்து பேசியது பற்றி சரத்பவார் பேட்டி

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தன்னை சந்தித்து பேசியது குறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேட்டி அளித்தார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் உத்தவ் தாக்கரே தன்னை சந்தித்து பேசியது பற்றி சரத்பவார் பேட்டி
Published on

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டம் ராய்காட் மாவட்டம் கர்ஜத்தில் அக்கட்சி தலைவர் சரத்பவார் தலைமையில், கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, சரத்பவார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், சஞ்சய் ராவுத்தும் கடந்த வாரம் என்னை மும்பையில் சந்தித்து பேசினர். அப்போது, பாரதீய ஜனதா தலைமையிலான அரசின் மீது அவர்களுக்கு திருப்தி இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும், ஆட்சியில் இருந்து வெளியேறுவது பற்றி அவர்கள் எதுவும் கூறவில்லை.

இந்த விவகாரத்தில், எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. அரசுக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் நாங்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்க போவதில்லை. நேரம் வரும்போது, ஒத்த கருத்து உடைய கட்சிகளுடன் நாங்கள் கலந்து ஆலோசிப்போம். இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.

முன்னதாக, கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும்போது, மத்தியில் சர்வாதிகாரப்போக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது. பொதுமக்களின் அடிப்படை உரிமைகளும், ஜனநாயக மதிப்பும் நசுக்கப்படுகிறது என்றார்.

மேலும், விவசாயிகளின் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருவதாக கூறிய சரத்பவார், பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகள் அவமதிக்கப்படுவதாகவும், விவசாயத்துக்கு என எந்தவொரு கொள்கையும் வரையறுக்கப்படாததால், விவசாயிகளின் பொருளாதார நிலை ஆபத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மராட்டியத்தில் கூட்டணி அரசை நடத்தி வரும் பா.ஜனதா- சிவசேனா கட்சிகள் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி அரசில் இருந்து சிவசேனா வெளியேறும் என்று சொல்லப்படுகிறது. அப்படி வெளியேறினால் பா.ஜனதாவுக்கு சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை பா.ஜனதாவை ஓரம் கட்டி விட்டு சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு யூகங்கள் வெளியாகி உள்ள நிலையில் சரத்பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து பேசிய தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com