தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு அட்டை வழங்குவதில் முறைகேடு

தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வேலைக்கான அட்டை வழங்குவதில் முறைகேடு நடப்பதாக ஒன்றியக்குழு கூட்டத்தில் கவுன்சிலர் குற்றம் சாட்டினார்.
தேசிய ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு அட்டை வழங்குவதில் முறைகேடு
Published on

கன்னிவாடி,

ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழு முதல் கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழு தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் சக்திவடிவேல் முருகன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஒன்றியக்குழு மூலம் நடைபெறும் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர் இடையே நடந்த விவாதம் வருமாறு:-

கவுன்சிலர் எஸ்.ராஜ்மோகன் (அ.தி.மு.க):- தருமத்துப்பட்டி கதிரையன்குளத்தின் கரையில் சாலை அமைக்கும் பணிக்கு அதிகாரிகள் ஆய்வு கொண்டது தொடர்பாக ஒன்றியக்குழு தலைவருக்கு தெரியுமா?, நீர்நிலைகளில் சாலை அமைக்க அனுமதி இல்லை. அப்படி இருக்கையில் சாலை அமைக்க அனுமதி கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

ஒன்றியக்குழு தலைவர்:- எங்களிடம் எந்த அனுமதியும் இதுவரை பெறவில்லை. பொறியாளர்கள் எந்த ஊராட்சி பகுதிக்கு சென்றாலும், அங்குள்ள கவுன்சிலருக்கு முதலில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம்

கவுன்சிலர் விவேக் (தி.மு.க):- நீலமலைக்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதியில் 13 கிணறுகள் உள்ளன. அந்த கிணறுகளில் தண்ணீர் அதிகளவில் இருக்கிறது. அந்த தண்ணீரை நீலமலைக்கோட்டை, புதுசத்திரம், பலக்கனூத்து ஊராட்சிகளுக்கு பகிர்ந்து வழங்க வேண்டும். கரியகவுண்டன்பட்டி பலக்கனூத்துவில் அங்கன்வாடி கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. எனவே பழைய கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டவேண்டும்.

ஒன்றியக்குழு தலைவர்:- இதுகுறித்து பொறியாளர்கள் மூலம் ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கவுன்சிலர் பிரபாகரன் (தி.மு.க.):- தேசிய ஊரக வேலை திட்டத்தில் நீண்ட நாட்களாக பணிதள பொறுப்பாளர்களாக இருப்பவர்களை ஏன் மாற்றுவதில்லை. மேலும் ஊரக வேலை திட்ட அட்டைகள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ஒன்றியக்குழு தலைவர்:- நீண்ட நாட்களாக பணியில் இருக்கும் பணிதள பொறுப்பாளர்களை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக வேலை திட்ட அட்டைகள் பெறுவதற்கு தொழிலாளர்கள் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தின் முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com