

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ளது பரக்கலக்கோட்டை. இங்குள்ள பொதுஆவுடையார்கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலின் செயல் அலுவலராக சம்பத்குமார் பணியாற்றி வந்தார்.
இவர் உரிய அனுமதியின்றி செலவு செய்ததாகவும், அதற்கு உரிய கணக்கு தாக்கல் செய்யாமல் முறைகேடு செய்ததாகவும், இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து சம்பத்குமாரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் தஞ்சை இணை ஆணையர் தென்னரசு கூறுகையில், பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் கோவில் செயல் அலுவலர் சம்பத்குமார் மீது முறைகேடு புகார்கள் வந்தன. அதன் பேரில் விசாரணை நடத்தினோம். இதில் முறைகேடு தொடர்பான முகாந்திரம் இருந்ததை தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினோம். இதைத்தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார்என்றார்.