இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: 25 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

கர்நாடக சட்டசபையில் 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 25 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. ஒரே தொகுதியில் சுயேச்சைகள் 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: 25 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு
Published on

பெங்களூரு:

2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

அதாவது விஜயப்புரா மாவட்டம் சிந்தகி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த எம்.சி.மணகுலி (ஜனதாதளம் (எஸ்)), ஹனகல் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த சி.எம்.உதாசி (பா.ஜனதா) ஆகியோர் மரணம் அடைந்ததால் இந்த இடைத்தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி கடந்த 1-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வந்தது. கடந்த 8-ந் தேதி மனுக்கள் தாக்கல் செய்வது நிறைவடைந்தது. மொத்தம் 37 பேர் மனு தாக்கல் செய்தனர்.

அரசியல் கட்சிகளின் மனுக்கள் ஏற்பு

இதில் ஹனகல் தொகுதியில் பா.ஜனதா சார்பில் சிவராஜ் சஜ்ஜனர், காங்கிரஸ் சார்பில் சிவராஜ் மானே, ஜனதா தளம் (எஸ்) சார்பில் நியாஜ் சேக் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

அதுபோல் சிந்தகியில் பா.ஜனதா சார்பில் ரமேஷ் புசனுர், காங்கிரஸ் சார்பில் அசோக் மணகுலி, ஜனதா தளம் (எஸ்) சார்பில் அங்கடி நாஜியா ஆகியோரும் கோதாவில் குதித்துள்ளனர். அவர்கள் 6 பேர் உள்பட 37 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையொட்டி நேற்று அந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இந்த 2 தொகுதிகளிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் மனுக்கள் உள்பட மொத்தம் 25 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டன.

12 பேரின் மனுக்கள் தள்ளுபடி

ஹனகல் தொகுதியில் மட்டும் 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சரியான ஆவணங்கள், முகவரி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 12 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

இதனால் அந்த 12 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். சிந்தகி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 8 பேரின் மனுக்களும் ஏற்கப்பட்டன.

வாபஸ் பெற நாளை...

இந்த நிலையில் மனுக்களை வாபஸ் பெற நாளை (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. அதன் பிறகு இடைத்தேர்தல் பிரசார களம் சூடுபிடிக்க தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com