ஊரடங்கின்போது விபத்து; சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு - டிரைவர் படுகாயம்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார் டிரைவர் படுகாயம் அடைந்தார்.
ஊரடங்கின்போது விபத்து; சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது கார் மோதி தீப்பிடித்ததால் பரபரப்பு - டிரைவர் படுகாயம்
Published on

ஸ்ரீபெரும்புதூர்,

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 36). இவர், நேற்று காலை தனது காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதேபோல் சென்னையில் இருந்து கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மேவலூர் குப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து மேவலூர் குப்பம் சாலைக்கு செல்வதற்காக லாரியை அதன் டிரைவர் சாலையின் வலது புறமாக திருப்பினார். அப்போது சென்னை நோக்கி வேகமாக வந்த பிரசாந்தின் கார், கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி லாரிக்கு அடியில் புகுந்தது. இதில் லாரி மற்றும் காரின் கண்ணாடிகள் நொறுங்கின.

லாரிக்கு அடியில் காரின் முன்பகுதி மாட்டிக்கொண்டதால் பிரசாந்த் உடனடியாக கதவை திறந்து வெளியே வரமுடியவில்லை. உடனடியாக அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து படுகாயத்துடன் சிக்கி உயிருக்கு போராடிய பிரசாந்த்தை மீட்டு செடிப்பேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் லாரி மீது மோதிய காரின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தீ மளமளவென லாரிக்கும் பரவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் இருங்காட்டுகோட்டை பகுதியில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், 1 மணிநேரம் போராடி கார் மற்றும் லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. லாரியின் முன்பகுதியும் சேதம் அடைந்தது.

தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து லாரியில் எரிந்த தீயை அணைத்துவிட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இல்லாவிட்டால் லாரி முழுவதும் தீ பரவி இருந்தால் அதில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறி பெரும் சேதம் ஏற்பட்டு இருக்கும்.

விபத்து நடந்த உடன் சிலிண்டர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com