வேப்பூர் அருகே கோர விபத்து: கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதல் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலி - கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்

வேப்பூர் அருகே கார்- மினிலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள். கோவிலுக்கு சென்றபோது நடந்த இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
வேப்பூர் அருகே கோர விபத்து: கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதல் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலி - கோவிலுக்கு சென்றபோது பரிதாபம்
Published on

வேப்பூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையத்தை சேர்ந்தவர் தேவானந்த் (வயது 35). இவரது மனைவி பரிமளா(27). இவர்களுக்கு ரேணுகாதேவி(7) என்ற மகளும், அறிவரசன்(3) என்ற மகனும் உள்ளனர். தேவானந்த் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார்.

இவர் விருத்தாசலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்று தனது 2 குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்த திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது உறவினர்களுக்கும் அவர் தெரிவித்து இருந்தார். அதன்படி தேவானந்த் தனது மனைவி பரிமளா, குழந்தைகள் ரேணுகாதேவி, அறிவரசன் மற்றும் உறவினர்கள் குணப்பிரியன்(19), செல்வசேகர்(32), சென்னை நந்தம்பாக்கம் ரேவதி(32), பவானி(15), பிரித்விசாய்(9), மணிமேகலை(55) ஆகியோருடன் ஒரு காரில் நேற்று காலை விருத்தாசலத்துக்கு புறப்பட்டார். இந்த காரை தேவானந்த் ஓட்டினார்.

இவர்களது கார், காலை 11 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரியநெசலூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே கடலூரில் இருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி மினிலாரி ஒன்று வேகமாக வந்தது.

அந்த சமயத்தில் காரின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், காருக்கும், எதிரே வந்த மினிலாரிக்கும் இடையே சென்று முந்தி செல்ல முயன்றார். இதில் மினிலாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீதும், எதிரே வந்த கார் மீதும் பயங்கரமாக மோதியது.

இதற்கிடையே அந்த வழியாக வந்த மற்றொரு கார், விபத்துக்குள்ளான காரின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் தேவானந்த் ஓட்டிச்சென்ற காரும், மினிலாரியும் சுக்குநூறாக நொறுங்கின. மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பரிமளா, பவானி, ரேவதி மற்றும் மீன் லாரியில் பயணம் செய்த மாற்று டிரைவரான நெய்வேலி மேட்டுக்குப்பத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தேவானந்த், ரேணுகாதேவி, அறிவரசன், குணப்பிரியன், செல்வசேகர், பிரித்விசாய், மணிமேகலை மற்றும் லாரி டிரைவர் நெய்வேலியை சேர்ந்த செல்வக்குமார்(38) ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லேசான காயத்துடன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்களும், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவானந்த் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே ரேணுகாதேவி, அறிவரசன் உள்ளிட்ட 7 பேரும் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில் விபத்துக்குள்ளாகி நடுரோட்டில் கிடந்த வாகனங்கள், பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதுபற்றி அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான வாகனங்களை பார்வையிட்டு, விபத்து குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேர் பலியானதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com