கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாலைகளை ஆக்கிரமிக்கும் செடிகளால் விபத்து அபாயம்

கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாலைகளில் முட்செடிகள் ஆக்கிரமித்து வளர்ந்து இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் சாலைகளை ஆக்கிரமிக்கும் செடிகளால் விபத்து அபாயம்
Published on

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியத்தில் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான கிராமங்களுக்கு தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பஸ் வசதி இல்லாத கிராமங்களில் வசிப்பவர்கள் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.

பஸ் போக்குவரத்து உள்ள சாலைகளில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் பஸ் போக்குவரத்து இல்லாத சாலைகளில் எந்தவித பராமரிப்பு பணிகளும் நடைபெறவில்லை. இதனால் நேருஜிநகர்-சிறப்பாறை, நரியூத்து-சிங்கராஜபுரம், கடமலைக்குண்டு-கொங்கரவு உள்ளிட்ட சில கிராம சாலைகளின் இரண்டு புறமும் முட்செடிகள் அதிக அளவில் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன.

இதனை அகற்ற வேண்டும் என பலமுறை வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாலைகளின் ஓரங்களில் இருபுறமும் வளர்ந்துள்ள முட்செடிகளால் சாலை குறுகலாக மாறிவிட்டன. மேலும் சில பகுதிகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவு முட்செடிகள் வளர்ந்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் செடிகள் அதிக அளவில் வளர்ந்து சாலையை முழுமையாக ஆக்கிரமிக்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து முட்செடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com