கல்வி உதவி பெற்ற இளைஞர்கள் உடன் செல்கின்றனர்: வியாபாரிகள், யாதவர், வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் சைதை துரைசாமி வாக்கு சேகரிப்பு

சென்னை கோட்டூர்புரத்தில், வியாபாரிகள் சங்கம், யாதவர் சங்கம், வன்னியர் சங்க நிர்வாகிகளை சந்தித்து சைதை துரைசாமி தனக்கு வாக்கு சேகரித்தார்.
கல்வி உதவி பெற்ற இளைஞர்கள் உடன் செல்கின்றனர்: வியாபாரிகள், யாதவர், வன்னியர் சங்க நிர்வாகிகளிடம் சைதை துரைசாமி வாக்கு சேகரிப்பு
Published on

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி களமிறங்கி இருக்கிறார். அவர் சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் தெரு, தெருவாக, வீடு, வீடாக சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சைதை துரைசாமி சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போதும், கொரோனா காலத்திலும், சைதாப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளார். மேலும், தனது மனிதநேய அறக்கட்டளை மூலம் ஏராளமானோருக்கு இலவசமாக படிப்பதற்கு உதவிகளை செய்து வருகிறார். இதனால், அந்த பகுதி மக்களுக்கு சைதை துரைசாமி மிகவும் பரீட்சையமானவராக திகழ்கிறார்.

மூதாட்டியுடன் சந்திப்பு

இந்த நிலையில், சைதாப்பேட்டை 142-வது கிழக்கு வட்ட பகுதியில் உள்ள சாமியார் தோட்டம், கோதாமேடு, திடீர் நகர், கொத்தவால்சாவடி ஆகிய பகுதிகளில் நேற்று காலை வாக்கு சேகரிக்க சென்று இருந்தார். அப்போது, சாமியார் தோட்டம் பகுதியில் சைதை துரைசாமியை நீண்டகாலமாக தெரிந்த 3 தலைமுறை கண்ட மூதாட்டி வளர்மதி சைதை துரைசாமியை தனது வீட்டிற்கு அழைத்து உபசரித்தார்.

அப்போது, வளர்மதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்ததாகவும், தற்போது சரியாகி விட்டதாகவும் தெரிவித்ததுடன், கூட்டங்களுக்கு செல்லும் நீ முக கவசம் அணிந்து கொள் என்று சைதை துரைசாமியிடம் குடும்பத்தில் ஒருவர் போல் உரிமையுடன் தெரிவித்தார்.

சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பு

அதைத்தொடர்ந்து மாலையில், கோட்டூர்புரம் பகுதியில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அதைத்தொடர்ந்து யாதவர் சங்கத்திற்கு சென்று சங்க நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலை சின்னத்தில் தனக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது யாதவ சங்க நிர்வாகி ரெங்கநாத ராயலு, சைதை துரைசாமி எம்.எல்.ஏ.வாக இருக்கும் போது, யாதவ சங்கத்துக்கு அரசு இடத்தை வாங்கி கொடுத்ததை எடுத்து கூறி நெகிழ்ச்சி அடைந்தார். மேலும், சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை மூலம் யாதவ மக்களுக்கு மேலும் பல நல உதவிகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அதைத் தொடர்ந்து, அதே பகுதியில் உள்ள வன்னியர் குல சத்திரியர்கள் நல சங்க நிர்வாகிகளை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது குறித்து எடுத்து கூறினார்.

ஏழை பெண் நெகிழ்ச்சி

பின்னர், கோட்டூர்புரம் அங்காளம்மன் கோவிலில் இருந்து திறந்த ஜீப்பில் ஏறி அந்த பகுதியில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார். வாக்கு சேகரித்து சென்ற இடங்களில் சைதை துரைசாமியுடன் அவரால் கல்வி உதவி பெற்ற இளைஞர்கள் உடன் சென்றனர்.

சைதை துரைசாமியின் தேர்தல் பிரசாரத்தின் போது, அவரை சந்தித்த ஒரு பெண், உங்கள் உதவியால் நீங்கள் கட்டி தந்த இலவச திருமண மண்டபத்தில தான் என் திருமணம் நடந்தது. வறுமையில் வாடிய என் பெற்றோர் உங்கள் உதவியால் எந்த செலுவும் இல்லாமல் என் திருமணத்தை நடத்தியதை நானும் என் குடும்பமும் மறக்கமாட்டோம் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com