

மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே அத்தமனஞ்சேரி ரெட்டிபாளையம் கிராமத்தின் வழியாக ஆரணி ஆறு செல்கிறது. இங்குள்ள வளைவு வழியாக வெளியேறும் வெள்ளநீர் காரணமாக ஆற்றின் கரை உடைந்து அருகே உள்ள ரெட்டிபாளையம், சிறுவேளூர், வேளூர், ஆத்தனஞ்சேரி, எரிப்பிள்ளைகுப்பம் உட்பட பல்வேறு கிராமங்கள் நீரில் சூழ்ந்து காணப்படும் சூழல் உள்ளது.
இதனால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளால் பயிரிடப்படும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனை அடுத்து ஆரணியாறு வடிநிலக் கோட்டம் பொதுப்பணித்துறை நீர்வள பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் கான்கிரீட் கரை தடுப்பு சுவர் ஆகியவை அமைக்க மதிப்பீடு அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து பேரிடர் மேலாண்மை ஆணையரின் சிறப்பு நிதி மூலம் ரூ.9 கோடி 69 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த டிசம்பர் மாதம் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பணை 120 மீட்டர் நீளத்திற்கும், 4 மணற்போக்கி சட்டருடன் 3.23 மீட்டர் உயரத்திற்கு கட்டிட பணிகள் முடிந்து சட்டர் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
கட்டப்பட்டு வரும் தடுப்பணையில் மழைநீர் தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் உயருவதுடன், ஆற்று நீரால் நெற்பயிர்கள் சேதமடையாது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.