மாவட்டம் முழுவதும், வங்கி ஊழியர்கள் 435 பேர் வேலைநிறுத்தம் - ரூ.130 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

மாவட்டம் முழுவதும் வங்கி ஊழியர்கள் 435 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், ரூ.130 கோடி பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும், வங்கி ஊழியர்கள் 435 பேர் வேலைநிறுத்தம் - ரூ.130 கோடி பரிவர்த்தனை பாதிப்பு
Published on

தேனி,

விலைவாசி உயர்வுக்கேற்ப புதிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். அதன்படி, நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் 96 கிளைகள் உள்ளன. இங்கு 450 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் சுமார் 435 பேர் நேற்று பணிக்கு வரவில்லை. அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பல்வேறு வங்கி கிளைகள் பூட்டப்பட்டு இருந்தன. திறந்து இருந்த சில வங்கிகளும் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக வங்கி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. காசோலை, வரைவோலை பரிவர்த்தனை நடக்கவில்லை. வங்கிகளில் அடகு வைத்த நகைகள் மற்றும் கடன் தொகைகளுக்கான வட்டி செலுத்துதல், நகைளை திருப்புதல், நகைகள் அடகு வைத்தல் போன்ற பணிகள் பாதிக்கப்பட்டன. வங்கி மூலமான அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் முடங்கின.

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.130 கோடி பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன. அதேநேரத்தில் தனியார் வங்கிகள் வழக்கம் போல் இயங்கின. 2-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com