

திருவள்ளூர்,
திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெயபாஸ்கரன் (வயது 55). இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், நான் லஞ்ச ஒழிப்பு அதிகாரி. உங்கள் மீது பல புகார்கள் வருகிறது என்று மிரட்டியுள்ளார்.
நீங்கள் ரூ.35 ஆயிரம் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என்று கூறி வங்கி கணக்கு எண்ணை கொடுத்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஜெயபாஸ்கரன் இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். விசாரணையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரி போல நடித்து பணம் கேட்டு மிரட்டியவர் தாம்பரம் சேலையூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் (29) மற்றும் அவருக்கு உடந்தையாக அவரது சகோதரர் ஜனார்த்தனன் (31) இருந்தது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பிடிபட்ட இருவரும் இதேபோல் அரசு அதிகாரிகளை மிரட்டினார்களா?. அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் யாரேனும் உள்ளனரா? என்று போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.