

சோதனை
பெருந்துறை அருகே உள்ள துடுப்பதியில் சாய் இரிக்கேசன்ஸ் மற்றும் ஸ்ரீ குப்பண்ணா பாலிமர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் சொட்டுநீர் பாசனத்துக்கான குழாய்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களை தயாரித்து வருகிறார்கள். இங்கு இந்திய தர நிர்ணய அமைவனம் வழங்கும் அங்கீகாரமான பி.ஐ.எஸ், மற்றும் ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முத்திரைகளை போலியாக பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தன.
அதைத்தொடர்ந்து கோவை இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (பி.ஐ.எஸ்.) தலைமை அதிகாரி மீனாட்சி கணேசன் உத்தரவின் பேரில், பி.ஐ.எஸ். அதிகாரிகள் நேற்று துடுப்பதியில் உள்ள சம்பந்தப்பட்ட
நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது போலி ஐ.எஸ்.ஐ. முத்திரைகள் பதிக்கப்பட்ட குழாய்கள் பெரிய நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களின் பெயரில் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. உடனடியாக அங்கிருந்து அந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ.2 லட்சம் அபராதம்
இதுபற்றி இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைமை அதிகாரி மீனாட்சி கணேசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய தர நிர்ணய சட்டத்தின் படி துடுப்பதி சாய் இரிக்கேசன் மற்றும் ஸ்ரீகுப்பண்ணா பாலிமர்ஸ் நிறுவனத்துக்கு அதிகபட்ச தண்டனையாக ரூ.2 லட்சம் அபராதம் அல்லது நிர்வாகிக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் விவசாயிகள், வினியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள் இதுபோன்ற போலி முத்திரையுடன் கூடிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். இதுபோல் குக்கர்கள், கியாஸ் அடுப்புகள், சிமெண்ட், டி.எம்.டி. கம்பிகள், மின்சார கேபிள்கள் போன்ற தயாரிப்புகளில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் ஐ.எஸ்.ஐ. முத்திரையின் தவறான பயன்பாட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே இதுபற்றி தகவல்கள் பொதுமக்களின் கவனத்துக்கு வந்தால் உடனடியாக இந்திய தர நிர்ணய அமைவனம், கோவை டவர்ஸ், 5-வது மாடி, டாக்டர் பாலசுந்தரம் ரோடு, கோவை 641018 என்ற முகவரியிலோ, 0422 2240141, 2249016, 2245984 என்ற தொலைபேசி எண்கள் அல்லது hct-bo@bis.gov.in என்ற இமெயில் முகவரிக்கு தகவல் அனுப்பலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள், ஆதாரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தலைவர் மீனாட்சி கணேசன் கூறி உள்ளார்.