குடிசைகளை தீ வைத்து எரிப்போம் என்று மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை - குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு

குடிசைகளை தீ வைத்து எரிப்போம் என்று மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
குடிசைகளை தீ வைத்து எரிப்போம் என்று மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை - குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, சப்-கலெக்டர் (பயிற்சி) மதுபாலன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். அதையடுத்து, தேசிய அளவில் நடந்த விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்ற திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 23 வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்க உதவித்தொகையாக ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்துக்கான காசோலையை கலெக்டர் வழங்கினார்.

அதன் பிறகு, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அப்போது, பழனி மருத்துவர் நகரை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் நாங்கள், பழனி மருத்துவர்நகரில் குடிசை அமைத்து கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கிறோம். நாங்கள் வசிக்கும் இடம் ஆக்கிரமிப்பு இடம் என்றும், அதனை காலிசெய்யும்படியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 முறை நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் எங்கள் பகுதிக்கு வந்து உடனடியாக குடிசைகளை காலிசெய்துவிட்டு சென்றுவிடுங்கள். இல்லையென்றால் குடிசைகளை தீ வைத்து எரிப்போம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தமிழ்தேச மக்கள் முன்னணியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் காளிமுத்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு இல்லை. இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மாத்திரைகளை போதுமான அளவு இருப்பு வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

வடமதுரையை அடுத்த பிலாத்து பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியை சேர்ந்த கர்ப்பிணியை சிலர் கல்லால் அடித்து துன்புறுத்தினர். மேலும் அவருடைய கணவரையும் போலீசார் மூலம் கைது செய்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 425 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 12 மனுக்களும் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com