

தூத்துக்குடி, மார்ச்:
அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பார்வையாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்ற பொது தேர்தல்கள் 2021 பொது பார்வையாளர்கள் மற்றும் போலீஸ் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர் பிரதிநிதிகள், அலுவலர்களுடன் தேர்தல் விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் அஸ்வானி குமார் சவுதாரி, ஜூஜவரப்பு பாலாஜி, சுஷில் குமார் படேல், சவின் பன்சால், அனில் குமார், தேர்தல் போலீஸ் பார்வையாளர் சப்ய சாஷி ராமன் மிஸ்ரா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், தேர்தல் செலவின பார்வையாளர்கள் குண்டன் யாதவ், ராகேஷ் தீபக், சுரேந்திர குமார் மிஸ்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் பேசியதாவது:-
புகார்
இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை அனைவரும் கடைபிடித்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சட்டம், ஒழுங்கை முறையாக பின்பற்ற வேண்டும். பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் அனைத்திற்கும் முறையாக அனுமதி பெற வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், மது, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எந்தவொரு வெகுமதிகளையும் வழங்கக்கூடாது. புகார் தெரிவிக்க விரும்புபவர்கள் தேர்தல் பார்வையாளர்களின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலரும் உங்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிப்பார்கள். ஒவ்வொரு வேட்பாளரும் தனியாக வங்கி கணக்கு தொடங்கி அதன் மூலமே செலவுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு செலவுக்கும் கணக்கு காட்ட வேண்டும். ஒவ்வொரு வேட்பாளர்கள் செய்யும் செலவுகளையும், நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் கண்காணித்து கொண்டிருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் தேர்தல் செலவு கணக்கை கணக்கு அலுவலர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளுடன் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் செய்திட வேண்டும். வேட்பாளர்களுக்கு தேவையான அனுமதிகள் தேர்தல் நடத்தும் அலுவலர் மூலம் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
நடவடிக்கை
தொலைக்காட்சிகள், உள்ளூர் தொலைக்காட்சிகள், செய்தித்தாள்களில் வரும் செய்திகள், விளம்பரங்கள், ஸ்குரோலிங்குகள் தேர்தல் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் வரும்போது, அவர்களின் நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அலுவலர்களால் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பணம், பரிசு வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனநாயக கடமையை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முன்னதாக ஒவ்வொரு வேட்பாளர்களும் செலவு கணக்கை 3 முறை செலவு கணக்கு குழுவிடம் தாக்கல் செய்ய வேண்டும். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு தபால் ஓட்டு வழங்கப்பட உள்ள விவரங்கள் அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தெரியப்படுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நல்லமுறையில் நடைபெற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூட்டத்தில் வேட்பாளர்கள், வேட்பாளர் பிரதிநிதிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் தொடர்பாக அமைக்கப்பட்ட பல்வேறு குழுக்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.