சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை ; அமைச்சர் எச்சரிக்கை

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காமராஜ் எச்சரித்து உள்ளார்.
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் வெளியே வந்தால் நடவடிக்கை ; அமைச்சர் எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னையில் அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணியை மேற்பார்வையிடுவதற்கு உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்தநிலையில் அவரது தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், அண்ணாநகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை மண்டல சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 3 மண்டலங்களில் கொரோனா தடுப்பு பணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியதாவது:-

கொரோனா நோய் பரவுவதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு வெளியில் வரும் போது தவறாமல் முககவசம் அணிந்து வரவேண்டும் என பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும். முககவசம் அணியாமல் வெளியில் வரும் பொதுமக்கள் மீது அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கொரோனா நோய் அதிகமாக பரவியுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்தோ, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்தோ, வெளியில் வருவது கண்டறியப்பட்டால், அந்த நபர்கள் தனியாக மையங்களில் தங்கவைக்கப்படுவதுடன் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com