தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உணவு தொழில் செய்தால் நடவடிக்கை கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உணவு தொழில் செய்தால்நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உணவு தொழில் செய்தால் நடவடிக்கை கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் பெறாமல் உணவு தொழில் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

உரிமம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் வசம் உள்ள உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள், சேமிப்பு கிட்டங்கிகள், சில்லறை விற்பனையாளர்கள், ஓட்டல், தெருவோர வணிகர்கள், விழாக்கால விற்பனையாளர்கள், போக்குவரத்தாளர்கள் உள்ளிட்ட அனைத்து வகை உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிமம் பெறுவது அவசியம் ஆகும். இந்த உரிமம் பெற https://foscos.fssai.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். ஒரே முறையில் 5 ஆண்டுகள் வரை செல்லத்தக்க வகையில் உரிய கட்டணம் செலுத்தி உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெறலாம்.

உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் காலாவதியாகிவிட்டால், உணவு தொழிலை நிறுத்துவதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை காலாவதியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தற்போது உரிமம் காலாவதியாகி இருந்தால் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுகிறது. காலாவதியான உணவு பாதுகாப்பு உரிமத்துடனோ, உரிமம் இன்றியோ, உணவுத் தொழில் புரிந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

எனவே உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு துறையின் இணையதளத்தை பயன்படுத்தி உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றுக் கொள்ளவும், பழைய உரிமத்தில் உள்ள தரம் நிர்ணயிக்கப்படாத உணவு பொருட்களுக்கு மத்திய அரசின் உரிமம் பெற ஏதுவாக திருத்தத்துக்கு விண்ணப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் காலாவதியாகி இருந்தால், புதிய உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இது குறித்து மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0461-2900669 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com