கன்னியாகுமரி விடுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை; செப்டிக் டேங்கை உடைத்து ஆய்வு

கன்னியாகுமரியில் கடலில் கழிவு நீர் கலப்பதாக மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலியாக விடுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது செப்டிக் டேங்கை உடைத்து ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி விடுதிகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை; செப்டிக் டேங்கை உடைத்து ஆய்வு
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் இருந்து கழிவுநீர் மற்றும் கழிவறை கழிவுகள் மீனவர் வசிக்கும் பகுதியான அலங்காரமாதா தெரு, சகாயமாதா தெரு வழியாக கடலில் கலப்பதாக மீனவர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. வீடுகளில் இருந்தும் கழிவுநீர் கடலில் கலப்பதாகவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

எனவே கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தை நேற்று முன்தினம் மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது 10 நாட்களுக்குள் விடுதிகள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் மீனவர்களின் முற்றுகை போராட்டத்தின் எதிரொலியாக விடுதிகளில் அதிரடி சோதனை நேற்று தொடங்கியது. குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் தலைமையில் இந்த சோதனை நடந்தது. அதாவது ஒவ்வொரு விடுதிகளுக்குள்ளும் துப்புரவு ஊழியர்களை அதிகாரிகள் அழைத்து சென்று செப்டிக் டேங் மற்றும் கழிவுநீர் குழாய்களை உடைத்து பார்த்தனர். பின்னர் செப்டிக் டேங்கில் இருந்து ஏதேனும் குழாய் மூலமாக கழிவறை நீரானது கடலுக்கு செல்கிறதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் நேற்று மதியம் வரை 50-க்கும் மேற்பட்ட விடுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் எந்த விடுதிகளில் இருந்தும் கழிவுநீர் மற்றும் கழிவறை நீரானது கடலுக்கு செல்லவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. எனினும் மீதமுள்ள விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். வீடுகளிலும் சோதனை நடைபெற உள்ளது.

சோதனையின் போது பேரூராட்சி செயல் அலுவலர்கள் சத்தியதாஸ் (கன்னியாகுமரி), அகஸ்திலிங்கம் (மயிலாடி), ஜோஸ்பின்ராஜ் (திருவட்டார்), மகாராஜன் (பூதப்பாண்டி), பாபு சந்திரசேகரன் (திங்கள்நகர்), சசிகுமார் (கீழ்குளம்), சுருளிவேல் (கடையால்), அருணாச்சலம் (தென்தாமரைகுளம்), மகாராஜன் (ஆற்றூர்), கன்னியாகுமரி பேரூராட்சி இளநிலை உதவியாளர் சண்முகசுந்தரம், சுகாதார அதிகாரி முருகன், இளைநிலை பொறியாளர் இர்வின் ஜெயராஜ், உதவி பொறியாளர் ஜெயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com