வெல்லத்தில் கலப்படத்தை தடுக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வெல்லத்தில் கலப்படத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
வெல்லத்தில் கலப்படத்தை தடுக்க நடவடிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் தகவல்
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இதில் வேளாண்மை இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் பாலமுருகன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் விவசாயிகள் வைத்த கோரிக்கைகளும், அதற்கு கலெக்டர் அளித்த பதில்களும் வருமாறு :-

விவசாயி சுந்தரம்:- தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வாங்கும் விவசாயிகளில் இயற்கை வேளாண்மை செய்பவர்கள் உரம் வாங்க தேவையில்லை என மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கடன் அளவு நிர்ணய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் அனுப்பிவைக்க வேண்டும்.

கடந்த 4 ஆண்டுகளாக பால் கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. இந்த கால கட்டத்தில் தீவனங்கள் விலை இரு மடங்கு உயர்ந்து விட்டன. இதனை கருத்தில் கொண்டு உடனடியாக பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் தீவனங்களை கட்டாயப்படுத்தி திணிக்கும் செயலை ஆவின் நிர்வாகம் கைவிட வேண்டும்.

வெல்லம் தயாரிக்கும் ஆலைகள், நாட்டு சர்க்கரையுடன் வெள்ளை சர்க்கரையை கலப்படம் செய்து வருவதால், கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மேலும் கலப்படத்தால் பொதுமக்களும் ஏமாற்றப்படுகின்றனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் :- வெல்லம் தயாரிக்கும் ஆலைகளில் வெள்ளை சர்க்கரையை இருப்பு வைக்க கூடாது என ஆலை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த உணவு பாதுகாப்பு அலுவலர் முன்னிலையில் ஆலை உரிமையாளர்களுக்கு கூட்டம் நடத்தப்பட உள்ளது. மேலும் ஆலைகளை கண்காணிக்க 6 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

ஜவ்வரிசியில் கலப்படத்தை தடுக்க எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளை போன்று, வெல்லம் தயாரிப்பில் கலப்படத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்னும் ஒரு மாத காலத்திற்குள் விவசாயிகள் இதனை உணர முடியும்.

குப்புதுரை:- காவிரி பாசன விவசாயிகளுக்கு தண்டத்தீர்வை என்ற பெயரில் ஹெக்டேருக்கு ரூ.500 வீதம் ஆண்டுதோறும் வசூலிக்கப்படுகிறது. இந்த தீர்வையை ரத்து செய்ய வேண்டும். மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் முழு அரவைத்திறன் அளவுக்கு கரும்பு கிடைக்க கரும்பு விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் ராஜ வாய்க்கால், குமாரபாளையம், பொய்யேரி வாய்க்கால்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விட்டால் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு சாகுபடி பரப்பு உயர வாய்ப்பு உள்ளது.

கலெக்டர் :- மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு அரவை பருவத்திலும் 4 டன் கரும்பு அரைக்க முடியும். ஆனால் அந்த அளவுக்கு ஆலைக்கு கரும்பு பதிவு செய்யப்படவில்லை. இதனால் காவிரி நீர் பாயும் பகுதிகளில் மோகனூர், பரமத்திவேலூர் வட்டாரங்களில் கோரை சாகுபடியை குறைத்துக்கொண்டு, கரும்பு பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்.

வையாபுரி:- பரமத்திவேலூர் ராஜ வாய்க்கால் பகுதியில் வெள்ளப்பெருக்கால் சேதமடைந்து தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட கரைப்பகுதிகளை, நிரந்தரமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டர் :- நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கமணி:- மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்யாத கரும்புக்கு டன்னுக்கு ரூ.200 வரை குறைத்து வழங்கப்படுகிறது. இந்த நடைமுறையை கைவிட்டு பதிவு செய்த கரும்புக்கு வழங்கப்படும் விலையையே வழங்க வேண்டும், ஆலையில் இணை மின் உற்பத்தி நிலைய பணிகள் தொடங்கி நடைபெற்ற நிலையில், பணிகள் முடிவு பெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இந்த பணிகளை விரைந்து முடித்து மின் உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரியதம்பி:- 2014-2015-ம் ஆண்டு வரை பால் உற்பத்தியாளர்களுக்கு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் போனஸ் வழங்கப்பட்டது. அதன்பிறகு வழங்கப்படவில்லை. வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பு பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.

இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com