

புதுச்சேரி,
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தமிழக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதைக்கண்டித்து தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழகம்-புதுச்சேரியில் பெரிய அரசியல் கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.
புதுவையில் அனைத்து நிர்வாகங்களும் சட்டம் ஒழுங்கை பாதுகாத்திடவும், பொது சொத்துக்களை பாதுகாத்திடவும், குறிப்பாக மத்திய அரசின் சொத்துக்களை பாதுகாத்திடவும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
அனைத்து துறை செயலாளர்களும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். அதேபோல் போலீஸ் டி.ஜி.பி.யும் தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு தனது பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.