ஆக்கிரமிப்புகளை அகற்றி சோழவரம் ஏரிக்கு அதிக தண்ணீர் செல்ல நடவடிக்கை; அதிகாரி தகவல்

சோழவரம் ஏரிக்கு அதிக தண்ணீர் செல்லும் வகையில் பேபி கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி சோழவரம் ஏரிக்கு அதிக தண்ணீர் செல்ல நடவடிக்கை; அதிகாரி தகவல்
Published on

கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு இணைப்பு மற்றும் பேபி கால்வாய் மூலம் திறந்து விடுவது வழக்கம்.

இந்த நிலையில் நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து முழு கொள்ளளவை எட்டியது. இதனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 27-ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இணைப்பு கால்வாய் வழியாக சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சோழவரம் ஏரி வரை சென்றடைய 29.27 கிலோமீட்டர் தூரம் வரை பேபி கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் பெருமளவு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்வாயில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர்தான் வெளிப்படுகிறது. பூண்டி ஏரியில் இருந்து சோழவரம் ஏரிக்கு அதிக தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன் பேரில் தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்பு கழக தலைவர் சத்யகோபால், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆகியோர் பூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாயில் பாய்ந்து செல்லும் மோவூர், விளாப்பாக்கம், ராமராஜ் கண்டிகை, வெளியூர், தாமரைப்பாக்கம், அணைக்கட்டு, சோழவரம் பகுதிகளை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மறுசீரமைப்பு கழக தலைவர் சத்யகோபால் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் பேபி கால்வாய் சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும். அதேபோல் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்றி சோழவரம் ஏரி கூடுதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு தமிழ்நாடு நீர்வள ஆதாரங்கள் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்பு கழக தலைவர் சத்யகோபால் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா, செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம், ஆரணியாறு செயற்பொறியாளர் ஜெயக்குமாரி திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com