உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை பார்வையாளர் தகவல்

உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பார்வையாளர் ஆப்ரகாம் கூறினார்.
உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ள புகார்கள் மீது நடவடிக்கை பார்வையாளர் தகவல்
Published on

கிருஷ்ணகிரி,

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ள புகார்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதிவேடுகளை தேர்தல் பார்வையாளர் டி.ஆப்ரகாம் பார்வையிட்டார். தொடர்ந்து புகார் தெரிவித்த சம்பந்தப்பட்ட புகார்தாரரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு புகார் குறித்து கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குகள் எண்ணும் மையமான பர்கூர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் ஆப்ரகாம், கலெக்டர் பிரபாகர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் தேர்தல் பார்வையாளர் ஆப்ரகாம் கூறியதாவது:-

13 புகார்கள்

உள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் 04343-233333 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மேலும் தேர்தல் சம்பந்தமாக புகார்கள் தேர்தல் பார்வையாளர் செல்போன் எண் 99407 30706 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் சூளகிரி பவர் கிரிட் மையத்தில் இயங்கி வரும் தேர்தல் பார்வையாளர் முகாம் அலுவலகத்தில் அறை எண் 3-ல் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நேரிலும் புகாரை தெரிவிக்கலாம். இதுவரை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 13 புகார்கள் வந்துள்ளது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பர்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கும் எண்ணும் மையமான பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில், வாக்கு எண்ணும் பணிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுற்று வாக்குப்பெட்டிகள் வைக்கும் பாதுகாப்பு அறையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

அதேபோல வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் ராமமூர்த்தி (பொது), லட்சுமணன் (ஊரக வளர்ச்சி), கமலக்கண்ணன் (தேர்தல்), உதவி இயக்குனர்கள் ஹரிகரன் (ஊராட்சி), பழனிசாமி (தணிக்கை), துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தாசில்தார் சித்ரா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com