கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முழுமையான நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூர் பேரூராட்சி, மல்லிப்பட்டினம், கரிசவயல் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசியதாவது:-

கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆளும் கட்சியும், 7 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆளும் கட்சியும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் என தமிழகத்தை பாலைவனமாக மாற்றி விட்டனர். கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் வீசிய கஜா புயல் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதி மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு சென்று விட்டது. பல பேர் வீடுகளை இழந்துள்ளனர். வாழ்வாதாரமாக இருந்த தென்னையை விவசாயிகள் இழந்து விட்டனர் மீனவர்கள் படகுகளை இழந்து இன்றுவரை தவித்து வருகின்றனர். வீடுகளை இழந்தவர்களுக்கோ, தென்னை விவசாயிகளுக்கோ, மீனவர்களுக்கோ இன்றுவரை நிவாரணம் முழுமையாக கிடைக்கவில்லை. மீனவர்களை பொறுத்தமட்டில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்கி விட்டு மல்லிப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. அதைப்பற்றி ஆளும் அரசுக்கு அக்கறையும் இல்லை.

புயல் தாக்கி ஒரு வாரம்வரை எந்தவொரு அமைச்சரோ, அதிகாரிகளோ பாதிப்பை பார்க்க வரவில்லை. ஒரு வாரம் கழித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஹெலிகாப்டர் மூலம் பட்டுக்கோட்டைக்கு ஒரு இடத்திற்கு மட்டும் பெயரளவில் வந்து விட்டு சென்றார். பேராவூரணி சட்டசபை தொகுதியை பொறுத்தமட்டில் நான் உங்களில் ஒருவன். உங்கள் வீட்டுப்பிள்ளை. அதனால்தான் புயலின்போது கடுமையான போக்குவரத்து இடையூறுகளுக்கிடையே மறுநாளே பேராவூரணி பகுதிக்கு ஓடோடி வந்தேன். அரசியல் ஆதாயத்திற்காக இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும்.

கஜா புயலால் நிவாரணம் கிடைக்காமல் தடுமாறி வரும் அனைவருக்கும் முழுமையாக நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நீங்கள் அனைவரும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெற்றிபெற செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com