நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்

நடிகர் அபிஷேக் பச்சன் சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்தார் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்
Published on

மும்பை,

இந்தி திரையுலக சூப்பர் ஸ்டா அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகனும். நடிகருமான அபிஷேக் பச்சன் இருவருக்கும் கடந்த மாதம் 11-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மும்பையில் உள்ள நானாவதி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவரின் மருமகளும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. இது சினிமா உலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பல இடங்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் ஐஸ்வர்யா ராயும், ஆராத்யாவும் குணமாகி கடந்த 27-ந் தேதி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினர். அமிதாப் பச்சனும், அபிஷேக் பச்சனும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

குணமாகி வீடு திரும்பினார்

இந்தநிலையில் 77 வயது நடிகர் அமிதாப் பச்சன் தொற்று பாதிப்பில் இருந்து குணமாகி கடந்த 2-ந் தேதி வீடு திரும்பினார்.

எனினும் தந்தையுடன் ஆஸ்பத்திரியில் சேர்ந்த நடிகர் அபிஷேக் பச்சனுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று நீங்கவில்லை. இதனால் அவர் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இ்ந்தநிலையில் நேற்று முன்தினம் அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தொற்று நீங்கியது தெரியவந்தது. எனவே சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்த அபிஷேக் பச்சன் வீடு திரும்பினார். தனக்காகவும், தனது குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

அபிஷேக் பச்சன் வீடு திரும்பியதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவரது தந்தை அமிதாப் பச்சன், கடவுள் மிகப்பெரியவர் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com