சித்தராமையாவுடன் நடிகர் சுதீப் திடீர் சந்திப்பு

சித்தராமையாவை நடிகர் சுதீப் திடீரென சந்தித்து பேசினார். சுதீப் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.
சித்தராமையாவுடன் நடிகர் சுதீப் திடீர் சந்திப்பு
Published on

பெங்களூரு,

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சுதீப். இவர் நான் ஈ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகிலும் பிரபலமானார். ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்து வருகிறார். சுதீப்புக்கு கர்நாடகத்தில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு முதல்-மந்திரி சித்தராமையாவை நடிகர் சுதீப் நேரில் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து சுதீப்பை அவருடைய வீட்டில் குமாரசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து நடிகர் சுதீப் காங்கிரசிலோ அல்லது ஜனதா தளம்(எஸ்) கட்சியிலோ சேருவார் என்று கூறப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் குமாரசாமியின் பிறந்த நாளுக்கு சுதீப் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

உடனே தனது வீட்டுக்கு வரும்படி சுதீப்புக்கு குமாரசாமி அழைப்பு விடுத்தார். அதை ஏற்று கடந்த 2-ந் தேதி சுதீப் பெங்களூருவில் உள்ள குமாரசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். சட்டசபை தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யுமாறும், ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைந்தால், எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவியை வழங்குவதாக குமாரசாமி கூறியதாகவும், அதற்கு ஆலோசித்து சொல்வதாக சுதீப் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த சூழ்நிலையில் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் நடிகர் சுதீப் நேற்று திடீரென சந்தித்து பேசினார். காங்கிரஸ் சார்பில் போட்டியிடுமாறு சித்தராமையா அவரிடம் கூறியதாகவும், இதுபற்றி ஆலோசித்து சொல்வதாகவும் சுதீப் கூறியதாக சொல்லப்படுகிறது.

பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த சுதீப்பை களத்தில் இறக்கினால் அந்த சமூகத்தின் ஓட்டுகளை ஓரளவுக்கு ஈர்க்க முடியும் எனறு சித்தராமையா மற்றும் குமாரசாமி ஆகியோர் கருதுகிறார்கள். இதனால் அவரை தங்களது கட்சியில் சேர்க்க அவர்கள் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் சுதீப் இந்த இரு கட்சிகளில் எந்த கட்சி பக்கம் போவார் என்பது அடுத்த சில நாட்களில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com