நடிகர் விஜய் படத்தின் வசனத்தை பேசி போலீஸ் வாகனத்தில் ஏறி டிக்-டாக் வெளியிட்ட 3 பேர் சிக்கினர்

நடிகர் விஜய் நடித்த படத்தின் வசனத்தை பேசி போலீஸ் வாகனத்தில் ஏறி டிக்-டாக் வெளியிட்ட 3 பேர் சிக்கினர். அவர்களுக்கு 8 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நூதன தண்டனை வழங்கப்பட்டது.
நடிகர் விஜய் படத்தின் வசனத்தை பேசி போலீஸ் வாகனத்தில் ஏறி டிக்-டாக் வெளியிட்ட 3 பேர் சிக்கினர்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் உள்ள ஒர்க்ஷாப் அருகே போலீஸ் வாகனம் ஒன்று பழுது நீக்குவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த வாகனத்தின் மீது ஏறி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் டிக்-டாக் எடுத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டனர்.

அந்த வீடியோவில் நடிகர் விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற தூக்கிட்டானுங்க நம்ம தூத்துக்குடி பசங்க. கெட்டப்பசங்க. கோடுனா ரோடு தான் என்று வசனம் பேசியுள்ளனர். தொடர்ந்து திரைப்பட பாடல் ஒன்றும் பின்னணியில் ஒலிக்கிறது. இவ்வாறு டிக்-டாக் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தூத்துக்குடி முனியசாமிபுரத்தை சேர்ந்த பலவேசம் மகன் சேகுவரா (வயது 21) மற்றும் 17 வயது சிறுவர்கள் 2 பேரும் இந்த வீடியோவை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சேகுவரா உள்ளிட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் சேகுவரா பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து உள்ளதும், ஒரு சிறுவர் 11-ம் வகுப்பு படித்து வருவதும், மற்றொரு சிறுவர் 6-ம் வகுப்பு வரை படித்து உள்ளதும் தெரியவந்தது.

பின்னர் அந்த 3 பேருக்கும் போலீசின் பணிகளை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நூதன தண்டனை கொடுக்க போலீசார் ஆலோசித்தனர். அதன்படி, 3 பேருக்கு 8 மணி நேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்த போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி, தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் சிக்னல் பகுதியில் 3 பேரும் காலை 8 மணி முதல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மதியத்துக்கு பிறகு 3 பேருடைய பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் எழுதி வாங்கி கொண்டு, 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் ஏறி டிக்-டாக் வெளியிட்ட 3 பேருக்கு போலீசார் அளித்த நூதன தண்டனை பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com