போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு

போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் விவேக் ஓபராயின் மனைவிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு
Published on

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் முன்னாள் மந்திரி ஜீவராஜ் ஆல்வாவின் மகன் ஆதித்யா ஆல்வா தலைமறைவாக இருந்து வருகிறார். அவர், போதைப்பொருள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருப்பதால், அவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆதித்யா ஆல்வாவின் அக்காள் பிரியங்கா ஆல்வாவை தான் இந்தியில் பிரபல நடிகராக இருந்து வரும் விவேக் ஓபராய் திருமணம் செய்துள்ளார். இதனால் விவேக் ஓபராய் வீட்டில் ஆதித்யா ஆல்வா பதுங்கி இருக்கலாம் என்பதால், மும்பையில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினார்கள். ஆனால் ஆதித்யா ஆல்வா அங்கு இல்லை என்று தெரிந்தது.

விசாரணைக்கு ஆஜராகவில்லை

அதே நேரத்தில் போதைப்பொருள் விவகாரத்தில் ஆதித்யா ஆல்வாவை காப்பாற்ற நடிகர் விவேக் ஓபராய், அவரது மனைவி பிரியங்கா ஆல்வா முயன்றது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி (அதாவது நேற்று) பிரியங்கா ஆல்வாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதாவது பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் நேற்று மதியத்திற்குள் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று பிரியங்கா ஆல்வா விசாரணைக்கு ஆஜராகவில்லை.

மேலும் விசாரணைக்கு ஆஜராக அவர் போலீசாரிடம் காலஅவகாசம் எதுவும் கேட்கவில்லை. இதனால் பிரியங்கா ஆல்வாவிடம் விசாரணை நடத்துவதற்காக மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் முடிவு செய்துள்ளனர். அவ்வாறு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை எனில், பிரியங்கா ஆல்வா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com