நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற எதிர் அணியினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயல்கின்றனர் - நாசர் குற்றச்சாட்டு

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற எதிர் அணியினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயல்கின்றனர் என்று வேலூரில் நடிகர் நாசர் கூறினார்.
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற எதிர் அணியினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயல்கின்றனர் - நாசர் குற்றச்சாட்டு
Published on

வேலூர்,

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியினரும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் மாவட்ட வாரியாக சென்று நாடக நடிகர்களிடம் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அதன்படி பாண்டவர் அணியை சேர்ந்த நடிகர்கள் நாசர், ராஜேஷ், ராணா, நடிகை சோனியா ஆகியோர் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் மாவட்ட நாடக நடிகர்களை வேலூரில் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

முன்னதாக நாசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள நாடக நடிகர்களை மாவட்டம் தோறும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறோம். பெருவாரியான நாடக நடிகர்களின் ஆதரவு எங்கள் அணியினருக்கு உள்ளது. இது அவர்களின் மனதில் இருந்து தெரிவித்த உணர்வுப்பூர்வமான ஆதரவு. கடந்த 3 ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் என்ன மாறுதல் ஏற்பட்டுள்ளது என்று மூத்த நாடக கலைஞர்களிடம் கேட்டால் தெரியும்.

தேர்தல் நடக்க உள்ள கட்டிடத்தின் ஒரு அரங்கத்தில் எஸ்.வி.சேகர் நாடகம் நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால் தேர்தல் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எதிர் அணியில் இருக்கும் பலர் எங்களுடன் ஒன்றாக இருந்தவர்கள். அவர்கள் அந்த சமயம் எங்களிடம் எந்த குறையும் செல்லவில்லை. தற்போது காரணம் எதுவும் கூறாமல் பிரிந்து சென்று விட்டார்கள். கடந்த 3 ஆண்டுகளாக நடிகர் சங்கத்தில் நடந்த அனைத்து செயல்பாடுகளையும் வெளிப்படையாக செய்து உள்ளோம். 1 ஆண்டுகளாக நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நடைபெறவில்லை என்ற காரணத்தை மட்டுமே எங்கள் மீது எதிர் அணியினர் கூறுகின்றனர்.

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு பல்வேறு சிக்கல்கள் இருந்தன. அதனை தீர்க்க சுமார் 15 மாதங்கள் ஆனது. தற்போது போதிய நிதி இல்லாததால் கட்டிடப் பணிகள் தொடர முடியாத நிலை காணப்படுகிறது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் பல கோடி தேவைப்படுகிறது. நடிகர் சங்க தேர்தல் நடத்த சுமார் ரூ.30 லட்சம் செலவாகும். கருத்து வேறுபாடுகள் குறித்து தெரிவித்து இருந்தால் இந்த தேர்தலை தவிர்த்து இருக்கலாம். எதிர் கட்சியினர் அவர்கள் விலகியதற்கான காரணத்தை கேட்க கூட அவகாசம் கூட தரவில்லை.

இந்த தேர்தலுக்கு அரசு சிறப்பாக பாதுகாப்பு கொடுக்கும் என்று நம்புகிறோம். குடும்பசூழ்நிலை காரணமாக இந்த தேர்தலில் பொன்வண்ணன் போட்டியிடவில்லை. விஷால் மீதான குற்றச்சாட்டை எதிர்கொண்டு அதற்கு தீர்வு காண முயல்வோம்.

எங்கள் அணியில் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு கட்சியின் ஆதரவு உள்ளது என்று கூறப்படுவது தவறானது. அனைத்து கட்சியினரையும் உள்ளடக்கிய அணி பாண்டவர் அணியாகும். தேர்தலில் வெற்றி பெற எதிர்கட்சியினர் பணம் கொடுத்து வாக்குகளை வாங்க முயல்கின்றனர். ஆனால் அவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தேர்தலில் வெற்றி பெற்று நடிகர் சங்க கட்டிடத்தை விரைவாக கட்டி முடிப்பதற்கான நிதியை திரட்ட தேவையான நடவடிக்கை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com